மாணவர்கள் 'லீவு' எடுப்பது அதிகரிப்பு - பள்ளிக் கல்வித்துறை உத்தரவால் ஆசிரியர்கள் திணறல் - Asiriyar.Net

Tuesday, October 22, 2024

மாணவர்கள் 'லீவு' எடுப்பது அதிகரிப்பு - பள்ளிக் கல்வித்துறை உத்தரவால் ஆசிரியர்கள் திணறல்

 




பள்ளிகளுக்கு வராமல், 'டிமிக்கி' தரும் மாணவர்களுக்கு, கல்வியின் முக்கியத்துவம் குறித்து ஆலோசனை வழங்கும்போது பெற்றோர்களின் ஒத்துழைப்பு அவசியம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை என, 326 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.


மாணவர்களுக்கு, காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுவதுடன், வகுப்பறைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.


அதேசமயம், பொருளாதாரம், உடல்நிலை போன்ற காரணங்களால் இடைநிற்றல், அடிக்கடி விடுப்பு எடுத்தலும் நடக்கிறது. இது ஒருபுறமிருக்க, சில மாணவர்கள், வாரத்தில் 2 நாட்கள் பள்ளிக்கு வந்தால், 3 நாட்கள் விடுப்பு எடுத்து விடுகின்றனர். இதனால், வகுப்பு ஆசிரியர்கள் செய்வதறியாது திணறி வருகின்றனர்.


தலைமையாசிரியர்கள் கூறியதாவது: தொடர்ந்து, 15 நாட்கள், பள்ளிக்கு வராத மாணவர்கள் இருந்தால், அவர்களது, பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்து, மீண்டும் பள்ளிக்கு வரவழைக்க ஆசிரியர்கள் முயற்சிக்கின்றனர்.


இல்லையெனில், அவர்களின் பெயர், பள்ளியில் இருந்து நீக்கப்படும். இதனை அறிந்து கொண்ட மாணவர்கள், தொடர்ந்து விடுப்பு எடுப்பதைத் தவிர்த்து, வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே பள்ளிக்கு வருகின்றனர்.


அதேபோல, மாணவர்களை அடிக்கவோ, கடிந்து கொள்ளவோ கூடாது; அன்பாக நடந்து கொள்ள வேண்டு என, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், தேர்ச்சி சதவீதம் குறைந்தால், ஆசிரியர்களின் தலை உருள்கிறது.


இதனால், மாணவர்களை ஒழுங்குபடுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. மாணவர்கள் இடையே கல்வியின் முக்கியத்துவம் குறித்து ஆலோசனை வழங்க, பெற்றோர்களின் ஒத்துழைப்பும் அவசியம்.


இவ்வாறு, கூறினர்.





No comments:

Post a Comment

Post Top Ad