"ஆட்சேபனை இல்லை" - அரசு பள்ளி தலைமையாசிரியரிடம் வித்தியாசமான கோரிக்கை மனு அளித்த தந்தை - Asiriyar.Net

Tuesday, June 11, 2024

"ஆட்சேபனை இல்லை" - அரசு பள்ளி தலைமையாசிரியரிடம் வித்தியாசமான கோரிக்கை மனு அளித்த தந்தை

 
அரசு பள்ளியில் மகளை விட வந்த தந்தை, தலைமையாசிரியரிடம் பிரம்பை கொடுத்து மகளை தண்டிக்க ஆட்சேபனை இல்லை என மனு அளித்தார். கோடை விடுமுறை முடிந்து நேற்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. 


மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் பூக்கள், இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர். முதல்நாள் என்பதால் பெற்றோர்கள் மாணவர்களை அழைத்து வந்து பள்ளிகளில் விட்டு சென்றனர். தொடக்கப்பள்ளிகளில் பயிலும் சில மாணவர்கள் பெற்றோரை விட்டு பிரிய மனமின்றி உள்ளே செல்ல மறுத்து அடம் பிடித்தனர். 


அவர்களை சமாதானப்படுத்தி வகுப்பறைகளுக்கு ஆசிரியர்கள் அழைத்து சென்றனர். திருச்சி புத்தூர் மாநகராட்சி ஆரம்ப பள்ளிக்கு அதே பகுதியை சேர்ந்த சேது.கார்த்திக் என்பவர், யு.கே.ஜி வகுப்பில் விட தனது மகளை அழைத்து வந்தார். அப்போது கையில் பிரம்புடன் வந்த அவர், அதை பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைத்ததோடு மனு ஒன்றையும் அளித்தார்.


அதில் அவர் கூறியிருந்ததாவது: எனது மகளை தங்களது பள்ளியில் யுகேஜி வகுப்பில் சேர்த்துள்ளேன். இன்று (நேற்று) முதல் என்னுடைய மகளை தங்கள் பொறுப்பில் ஒப்படைக்கிறேன். நாளைய சமுதாயத்தில் எனது மகள் மிகச்சிறந்த நிலைக்கு வருவதற்கு தாங்கள் எடுக்கும் எல்லா முயற்சிக்கும், நடவடிக்கைகளுக்கும் நான் கட்டுப்படுகிறேன். 


அதற்காக தாங்கள் எனது மகளை அன்போடும், பண்போடும், கண்டிக்கவும், தேவைப்படும் பட்சத்தில் பிரம்பால் அடித்து தண்டிக்கவும் நான் முழுமனதோடு சம்மதம் தெரிவிக்கிறேன். இதில் எனக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்று உறுதி கூறுகிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தார்.


இதுகுறித்து சேது.கார்த்திக் கூறுகையில், முன்பெல்லாம் ஆசிரியர்கள் மாணவர்களை கண்டித்தும், தேவைப்பட்டால் அடித்தும் பாடம் கற்பித்தனர். அப்போது ஆசிரியர்கள் மீது மதிப்பும், மரியாதையும் அதிகளவில் இருந்து வந்தது.


தற்போது மாணவர்களை கண்டித்தாலோ, அடித்தாலோ நகர் மற்றும் கிராமப்புறங்களில் பெற்றோர் சிலர், ஊரை திரட்டி வந்து ஆசிரியர்களை திட்டுவது, தாக்குவது போன்ற சம்பவங்கள் அரங்கேறுகிறது. அப்படியின்றி பெற்றோர்கள், ஆசிரியர் மற்றும் ஆசிரியைகளை முழுமையாக நம்பி அவர்களிடம் குழந்தைகளை ஒப்படைக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தவே பிரம்பு, கடிதம் அளித்ததாக தெரிவித்தார்.Post Top Ad