அரசுப் பள்ளிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வக நிர்வாகி மற்றும் பயிற்றுநர்களுக்கான பணிகளை பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநரகம் வரையறை செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தலா 20 கணினிகளும், உயர்நிலைப் பள்ளிகளில் 10 கணினிகளும் கொண்ட உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் (ஹைடெக் லேப்) அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆய்வகங்களை கடந்த 5 ஆண்டுகளாக எல் அண்டு டி நிறுவனம் பராமரித்து வந்தது.அதன் பராமரிப்பு காலம் சமீபத்தில் முடிவடைந்தது. இதையடுத்து ஆய்வகங்களை பராமரிப்பதற்காக கணினி தொழில்நுட்பம் அறிந்தவர்களை தேர்வு செய்யும் பணிகளை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் மேற்கொண்டது. அதன்படி தனியார் முகமை மூலமாக அதற்கான தேர்வு நடைமுறைகள் நடத்தப்பட்டன.
இந்த பணிக்கான கலந்தாய்வுக்கு 7,932 பேர் அழைக்கப்பட்டனர். அதில் 7,404 பேர் கலந்து கொண்டனர்.அவர்களில் 6,890 பேர் ஆய்வக மேற்பார்வை பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சேலத்தில் 374, குறைந்தபட்சமாக திருநெல்வேலியில் 49 என்றபடி ஆய்வக நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தேர்வான உயர்தொழில்நுட்ப ஆய்வக நிர்வாகி மற்றும் பயிற்றுநர்களுக்கான பணிகளை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநரகம் வரையறை செய்து வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:இணைய வசதி வழங்கியுள்ள நிறுவனங்கள் மற்றும் மின்சாரத் துறையை உடனே அணுகி தொழில்நுட்ப குறைபாடுகளை சரி செய்ய வேண்டும். முக்கியமான தகவல்களை பாதுகாக்க தரவு தனியுரிமை மற்றும் ரகசியத்தன்மை கொள்கைகளை கடைபிடிப்பது அவசியம். ஆய்வகங்கள் மற்றும் திறன்மிகு வகுப்பறைகளை பயன்படுத்தும் போது ஏற்படும் பிரச்னைகளை உடனே ஆசிரியர் பயிற்றுநர்கள் (ஐசிடி), மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்களை தொடர்பு கொண்டு சரி செய்ய வேண்டும்.ஆசிரியர்கள் கற்பித்தலின்போது தொழில்நுட்பத்தை திறம்பட ஒருங்கிணைக்க ஏதுவாக அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும்.
எமிஸ் மற்றும் யுடிஐஎஸ்இ சார்ந்த தரவுகளின் பதிவுகளை தங்களது பள்ளிக்கும், பள்ளியுடன் இணைக்கப்பட்டுள்ள குறுவள மைய பள்ளிகளுக்கும் மேற்கொள்ள வேண்டும். தேர்வு செய்யப்பட்ட உயர்தொழில்நுட்ப ஆய்வக நிர்வாகி மற்றும் பயிற்றுநர்களுக்கு மாத கவுரவ ஊதியமாக (அடிப்படை ஊதியம், பிஎப் உள்பட) ரூ.11,452 வழங்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment