மறு சீரமைக்கப்படுமா இல்லம் தேடிக் கல்வி 2.0? - Asiriyar.Net

Monday, June 17, 2024

மறு சீரமைக்கப்படுமா இல்லம் தேடிக் கல்வி 2.0?

 கொரோனா தொற்று காரணமாக நிகழ்ந்த நாடு முழுவதும் மேற்கொண்ட பொதுமுடக்கம் உள்ளிட்ட அசாதாரண சூழல் நிலவியது. இக்காலக் கட்டத்தில் பல்வேறு உளவியல் சிக்கல்களுடன் கற்றல் இழப்பையும் பள்ளி வயதுப் பிள்ளைகள் சந்திக்க நேரிட்டது. 


அதனால் மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த மாநில மற்றும் ஒன்றிய அரசுகள் பல்வேறு வகையான திட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கின. இவற்றுள் தமிழ்நாடு அரசு முன்மொழிந்து செயல்படுத்திய இல்லம் தேடி கல்வித் திட்டம் என்பது ஒரு முத்தாய்ப்பான திட்டமாக விளங்கி வருகிறது. 


இத்திட்டத்தின் மூலம், அரசு கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களுக்குப் பல்வேறு வசதிகளைச் செய்து தருகிறது. மேலும் இத்திட்டத்தின் மூலம் மாணவ, மாணவியருக்கு விளையாட்டு வழியில் தனிப்படிப்பு முறையில் கல்வி வழங்கப்பட்டு வருகிறது. 


கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த இல்லம் தேடி கல்வி திட்டமானது தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருவதும் மாநில, மாவட்ட மற்றும் ஒன்றிய அளவில் இதனைக் கண்காணிக்கவும் தன்னார்வலர்களுக்குப் போதிய பயிற்சி அளிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.


இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின்கீழ் கற்றல் பயிற்சி மையங்கள் 38 மாவட்டங்களிலும் செயல்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் ஏறக்குறைய 2.1 இலட்சம் தன்னார்வலர்கள், 35 இலட்சம் குழந்தைகளுக்கு தினமும் மாலை நேரத்தில் கல்வி கற்பித்து வருகின்றனர். குறிப்பாக, ஒன்றில் இருந்து ஒன்றரை மணி நேரம் குறைதீர் கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. 1 முதல் 8 வகுப்பு முடிய உள்ள குழந்தைகள் இதன் பயனாளிகளாக உள்ளனர்.


இதுதவிர, தமிழ்நாடு அரசு சிறப்பாக போதுமான நிதி ஒதுக்கிச் செயல்படுத்தி வரும் 'இல்லம் தேடிக் கல்வி' திட்டம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் பேசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதேபோல், அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஓர் ஆய்வில் இல்லம் தேடிக் கல்வித் திட்டமானது குழந்தைகளின் கற்றல் இடைவெளியிலிருந்த தடைகளைத் தகர்த்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளது. ஆகவே, இதனை இந்தியா நாடு முழுமைக்கும் செயல்படுத்த வேண்டும் என்றும் அந்த ஆய்வின் பரிந்துரையை எளிதில் புறம்தள்ளி விடமுடியாது.


இந்நிலையில் இத்திட்டத்தின்கீழ்ப் பணிபுரியும் தன்னார்வலர்களின் தன்னலமற்ற ரூ.1000 மட்டுமே வழங்கப்படும் மதிப்பூதியம் பற்றி கவலைப்படாமல் தொடரும் கல்விச் சேவையைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் நடுநிலைப்பள்ளி வளாகங்களில் இயங்கும் மழலையர் பள்ளி வகுப்பிற்கான ரூ.5000 தொகுப்பூதியத்தில் பகுதி நேரமாக உழைத்திட தக்க தகுதி வாய்ந்த தன்னார்வ ஆசிரியைகளாகப் பணியாற்றிட கல்வித்துறை முன்வந்து முன்னுரிமை கொடுத்துள்ளது அறியத்தக்கது.


இயல்பாகவே இல்லம் தேடிக் கல்வியில் ஏற்பட்ட தொய்வால் இதில் பணியாற்றும் தன்னார்வலர்கள் பலரையும் வெவ்வேறு துறைகளில் தேவைப்படும் மனித வளத்திற்கு மடைமாற்றம் செய்திடும் போக்குகள் தற்போது அதிகரித்துக் காணப்படுகின்றன. 


அதன் ஒரு பகுதியாக பள்ளிக்கல்வித் துறையில் நடுநிலைப்பள்ளிகளில் நடப்புக் கல்வியாண்டில் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் ( Hi Tech Lab), மெய்நிகர் வகுப்பறை (Smart Class) மற்றும் கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையம் (EMIS) சார்ந்த பணிகளை மேற்கொள்ள ஏதுவாக, கணினிப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கும் நபர்களை தனியார் நிறுவனம் ஒன்றின் துணையுடன் தோராயமாக ரூ. 11450 கௌரவ ஊதியத்தில் நியமிக்கும் பணிகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளது. 


இதன்மூலம் ஆசிரியர்கள் எமிஸ் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு முழுநேரமும் கற்பித்தல் பணியில் ஈடுபட ஒரு நல்வாய்ப்புக் கிட்டியுள்ளது வரவேற்கத்தக்கது. 


இவர்கள் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பள்ளியில் நிறுவப்பட இருக்கும் உயர் தொழில்நுட்ப ஆய்வகப் பணியுடன் அப்பள்ளியின் மற்றும் அதனுடன் இணைக்கப்பட இருக்கும் பள்ளிகளின் எமிஸ் உள்ளிட்ட இணையவழி சார்ந்த வேலைகள் அனைத்தையும் செய்து முடிப்பார்கள் என்று கூறப்படுகிறது. அதேவேளையில், இவர்கள் அனைவரும் முறையான கல்வித்தகுதியுடன் கூடிய இணைய வழியிலான இரண்டாம் கட்ட தேர்வில் தேர்ச்சிப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் ஆவர். 


இதுபோன்று இந்த இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்கள் பல்வேறு துறைகளில் எதிர்காலத்தில் புகுத்தப்பட உள்ளனர். நடப்பு ஆண்டில் இன்னும் இந்த கற்றல் மையங்கள் திறக்கப்படாமல் உள்ளன. பல்வேறு தரப்பினரின் பாராட்டைப் பெற்ற இத்திட்டம் ஒரேயடியாக மூடுவிழா காண்பது என்பது வருத்தத்திற்குரியது. 


இவற்றுள் நன்கு செயல்படும் மற்றும் செயல்படாத மையங்கள் குறித்து கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு அதன்படி இதுகுறித்த நடவடிக்கைகளும் செயல்பாடுகளும் மேற்கொள்ளப்படும் என்று அறியப்படுகிறது. மேலும், கூடுதலான மையங்கள் ஒருங்கிணைக்கப்படுவதும் ஒருவகையில் நல்லதேயாகும். 


இம்மையங்கள் தொடர்ந்து செம்மையாகச் செயல்படுவதில் பல்வேறு சிரமங்கள் இருந்த போதிலும் குழந்தைகளின் வாசிப்புத் திறன் மற்றும் பள்ளிக்குப் பிந்தைய கற்றல் சார்ந்த தொடர்பணிகள் ஆகியவற்றை மேம்படுத்துதல் மற்றும் ஒழுங்குப்படுத்துதல் போன்றவற்றில் முக்கியப் பங்காற்றி உள்ளன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 


குறிப்பாக, மெல்ல மலரும் மாணவர்களுக்கு இந்த இல்லம் தேடிக் கல்வி மையங்கள் ஒரு நல்ல வடிகாலாக அமைந்திருக்கின்றன. எண்ணும் எழுத்தும் முழுதாகக் கற்கும் சூழல் பள்ளி வகுப்பறைகளைக் காட்டிலும் இதுபோன்ற மையங்களில் தான் செழுமையுடன் மொட்டவிழ்த்தது என்பது மிகையாகாது. 


இத்தகைய நிலையில், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தைத் தொடர்ந்து புனரமைப்பதும் ஒழுங்குப்படுத்துவதும் இன்றியமையாதது. அதாவது, கற்றலில் பின்தங்கிய, எண்ணும் எழுத்தும் தெரியாத குழந்தைகளுக்கு மொழி மற்றும் கணித அடிப்படைத் திறன்களைக் கற்றுத் தரும் குறைதீர் நடவடிக்கை மையங்களாக இல்லம் தேடிக் கல்வி மையங்களை உருவாக்குதல் நல்லது. 


இதுதவிர, பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் ஏழை, எளிய, அடித்தட்டு மற்றும் விளிம்பு நிலையில் உள்ள ஆர்வமிக்க மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் எளிதில் வந்து செல்லும் இடங்களில் பெற்றோர்கள் துணையுடன் அதிகம் வழிகாட்டுதல் தேவைப்படும் ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களில் தகுதி வாய்ந்த தன்னார்வலர்களைக் கொண்டு தனிப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் மையங்களாகவும் இவற்றை முறைப்படுத்துதல் அவசர அவசியம் மிக்க நடவடிக்கையாகும். 


ஏனெனில், மருத்துவம், பொறியியல் படிப்புகள் சார்ந்த கனவுகளுடன் கல்வி பயிலும் கிராமப்புற, பணம் செலுத்தி நகரங்களில் காணப்படும் தனிப் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து படிக்க இயலாத, உரிய பாதுகாப்பும் போக்குவரத்து வசதியும் அற்ற, இதன் காரணமாக நல்ல மதிப்பெண்கள் பெற முடியாத, படிக்காத பாமர மக்களின் பிள்ளைகளின் இருண்ட காலம் வெளிச்சத்திற்கு வரக்கூடும்.


பொதுமுடக்கக் காலத்திற்கு பிந்தைய ஆண்டுகளில் இல்லம் தேடிக் கல்வி மையங்களைப் பழையபடி நடத்துவதில் பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருவதை எளிதில் கடந்து செல்ல முடியாது. 


இதை நம்பி வாழ்க்கையை ஒருவித நம்பிக்கையுடன் சொற்ப மதிப்பூதியத்தைக் கவனத்தில் கொள்ளாமல் பணயம் வைத்த படித்த, பட்டதாரி இளம்பெண்களின் வேலைவாய்ப்புக் கனவை நசுக்குவது என்பது பிற்பாடு பல்வேறு எதிர்மறை விளைவுகளையும் அவப்பெயரையும் திராவிட மாடல் அரசு எதிர்கொள்ள நேரிடும். அதற்காக வெறுமனே வீணாக ஊதியம் உள்ளிட்ட இதர செலவுகள் செய்து கொண்டிருக்கவும் முடியாது. அதுவும் ஒருவித கெட்ட பெயரையே ஏற்படுத்தும். 


இத்தகு சூழலில், நாடு போற்றும் நல்ல நோக்கத்திற்காகவும் தொலைநோக்கு பார்வையுடன் தோற்றுவிக்கப்பட்ட இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தை முறைப்படுத்திச் சீரமைப்புச் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஒருபோதும் இதைக் கைவிடும் எண்ணம் அரசுக்குக் கூடாது என்பது கல்வியாளர்கள் பலரின் பணிவான வேண்டுகோளாக உள்ளது. 


அதுபோல், தேவைக்கு மிகுதியான மையங்களை ஒருங்கிணைத்து மெல்ல மலரும் மாணவர்களுக்கான கற்றல் நேசிப்பு மையங்களாகவும் பொதுத்தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற உதவிடும் வழிகாட்டி மையங்களாகவும் தகவமைத்துத் தருவதும் மறுசீரமைப்புச் செய்யப்படுவதும் என்பது கல்வித்துறையின் முழுமுதற் கடமையாகும். 


அங்கு பணிபுரியும் தன்னார்வலர்களின் தன்னலமற்ற உழைப்பைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கான மதிப்பூதியத்தை அதிகரித்து வழங்குவதும் நல்ல பலனைத் தரும். பலரது உள்ளம் கவர்ந்த இல்லம் தேடிக் கல்வி 2.0 ஐ விரைந்து நடைமுறைப்படுத்த இருக்கும் கல்வியிற் சிறந்த தமிழ்நாடு இந்திய ஒன்றியத்திற்கு புதியதொரு விடியலைத் தர வேண்டும் என்பது எல்லோரது எதிர்பார்ப்பு. நிறைவேறுமா?


மணி கணேசன் 


Post Top Ad