ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் -அமைச்சர் வேண்டுகோள் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, October 5, 2023

ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் -அமைச்சர் வேண்டுகோள்

 சமவேலைக்கு சம ஊதியம் கோரி கடந்த 7 நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேபோல், பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் தங்களுக்கு முழு நேர ஆசிரியர் பணி வழங்க வேண்டும் என்று கோரியும், டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போட்டித்தேர்வை ரத்து செய்து, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யக்கோரியும் போராடுகின்றனர்.


போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்கள் சங்கங்களுடன், கல்வித்துறை உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் ஏற்படவில்லை.


இந்த நிலையில் போராடி வரும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


ஆலோசனை முடிவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-


மூவர் குழு


சம வேலைக்கு சம ஊதியம் கோரி போராடும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை என்பது, 6-வது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி பல்வேறு துறைகளில் 1.6.2009-க்கு பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர் மற்றும் பிற பணியாளர்களுக்கு ஏற்பட்ட ஊதிய முரண்பாடு இடைநிலை ஆசிரியர்களுக்கும் ஏற்பட்டது. இதனை கவனமுடன் பரிசீலித்து அரசுக்கு பரிந்துரை அளிக்க, நிதித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர்கள், தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோர் அடங்கிய மூவர் குழு அமைக்கப்படுகிறது.


இந்த குழு 3 மாத காலத்துக்குள் பரிந்துரைகளை இறுதிசெய்து, முதல்-அமைச்சர் உரிய முடிவு எடுக்க சமர்ப்பிக்கப்படும். இதனை ஏற்று ஏற்கனவே பள்ளி திறந்த நிலையிலும், எண்ணும் எழுத்தும் திட்டத்துக்கான ஆசிரியர்களுக்கு பயிற்சி நடப்பதாலும் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு பயிற்சியில் சேருமாறும், அதன் பின்னர் பள்ளிகளுக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.


ரூ.2,500 ஊதிய உயர்வு


அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் நியமிக்கப்பட்ட 10 ஆயிரத்து 359 சிறப்பு ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு தற்போது ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. நிதி நெருக்கடி இருந்தாலும், இந்த ஆசிரியர்களுக்கு ரூ.2,500 மாத ஊதிய உயர்வு வழங்கப்பட்டு, ரூ.12 ஆயிரத்து 500 உயர்த்தி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.


மேலும் இவர்கள் கேட்காத கோரிக்கையான, ரூ.10 லட்சம் மருத்துவ செலவுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும். இதற்கான காப்பீட்டு தொகையை அரசே செலுத்தும். எனவே இதனை ஏற்று வேலை நிறுத்தத்தை கைவிட்டு உடனே பள்ளிக்கு திரும்பி பணி புரிய வேண்டும்.


டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் பணிக்காக காத்திருப்பவர்கள், உச்ச வயது வரம்பு பொது பிரிவினருக்கு 53-ம், இதர பிரிவினருக்கு 58 ஆக உயர்த்த முடிவு செய்துள்ளது. மேலும் ஆசிரியர் தேர்வு சார்ந்த பல்வேறு வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.


171 தற்காலிக தொழிற்கல்வி ஆசிரியர்களை முறையாக ஊதிய விகிதத்துக்கு கொண்டு வருவது சார்ந்த அரசாணை விரைவில் வெளியிடப்படும்.


பொது நூலகத்துறையில் நீண்ட நாட்களாக பணிபுரியும் ஊர்ப்புற நூலகர்கள் தங்களை 3-ம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு கேட்கிறார்கள். 1,530 பேர் ஊர்ப்புற நூலகர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இவர்களில் 446 பேருக்கு 3-ம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வழங்கும் அரசாணை வெகு விரைவில் வெளியிடப்படும்.


பணிக்கு திரும்ப வேண்டும்


ஆசிரியர்களின் உணர்வுகளை மதிக்கக்கூடிய வகையில் இன்று இந்த அறிவிப்பை வெளியிட முதல்-அமைச்சர் சொன்னார். ஆசிரியர்களாகிய நீங்கள் உங்களை வருத்திக்கொண்டு அந்த மன உளைச்சலை முதல்-அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்காமல் தொடர்ந்து பணிகளை செய்யுங்கள். உங்களுக்கானதை பார்த்து, பார்த்து செய்வதற்கு முதல்-அமைச்சர் இருக்கிறார். எனவே ஆசிரியர்கள் போராட்டங்களை முடித்துக்கொண்டு பணிக்கு திரும்ப கேட்டுக்கொள்கிறேன்.


எங்களால் என்ன செய்ய முடியுமோ அதனை முதல்கட்டமாக செய்திருக்கிறோம். ஆசிரியர்கள் முதல்-அமைச்சர் மற்றும் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் பணியை செய்யுங்கள், உங்களுக்கான பணியை செய்ய நாங்கள் உள்ளோம்.


இவ்வாறு அவர் கூறினார்.


Post Top Ad