"ஏமாற்றம்" - அமைச்சர் அறிவிப்புக்கு பிறகு போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் அறிவிப்பு - Asiriyar.Net

Wednesday, October 4, 2023

"ஏமாற்றம்" - அமைச்சர் அறிவிப்புக்கு பிறகு போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் அறிவிப்பு

 


ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். எனினும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை என்பதால் போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.


சென்னையில் ஆசிரியர்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் ஏழாவது நாளாகத் தொடர்ந்து வருகிறது. சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்களும், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதிநேர ஆசிரியர்களும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கூட்டமைப்பினரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், போராட்டத்தை கைவிடாமல் உறுதியாக இருந்து வருகின்றனர்.


ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், ஆசிரியர்கள் சங்கம், பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. அவர்களின் கோரிக்கைகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, முதல்வரிடம் ஆலோசித்து விட்டு அறிவிப்பு வெளியிடுவதாக தெரிவித்தார். ஆனால், முறையான அறிவிப்பு வரும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என ஆசிரியர் சங்கத்தினர் அறிவித்தனர்.


இந்நிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களைச் சந்தித்து ஆசிரியர்கள் நலனுக்காக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.


பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியம் 12,500 ஆக உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் ரூ.10,000 ஊதியம் பெற்று வரும் நிலையில், அவர்களுக்கு ரூ.2,500 உயர்த்தப்பட்டு ரூ.12,500 ஊதியமாக வழங்கப்படும். ஆசிரியர்களுக்கு ரூ. 10 லட்சத்தில் மருத்துவக் காப்பீடும் வழங்கப்படும். தொழிற்கல்வி ஆசிரியர்கள் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்தார்.


மேலும், சம வேலைக்கு சம ஊதியம் எனும் ஆசிரியர்களின் கோரிக்கையை ஆய்வு செய்ய மூவர் குழு அமைக்கப்படும். 3 மாதத்துக்குள் இந்தக் குழு அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும். பள்ளிக் கல்வித்துறைச் செயலர், நிதித்துறை செயலர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெறுவார்கள் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்தார். அதோடு, ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்குத் திரும்ப அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்தார்.


போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் அறிவிப்புகளை நேரலையாக பார்த்துக் கொண்டிருந்தனர். அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர் சந்திப்புக்குப் பிறகு ஆசிரியர்கள் சங்கத்தினர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய பகுதி நேர ஆசிரியர்கள், 2,500 சம்பள உயர்வு போதாது, எங்களை முழு நேர ஊழியர்களாக நியமிக்க வேண்டும், அதுவரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் எனத் தெரிவித்தனர்.


அதேபோல, பகுதி நேர ஆசிரியர்கள், பணி நிரந்தரம் கேட்டால் 10 லட்சம் மருத்துவக் காப்பீட்டை வாங்கிக் கொள்ளுங்கள் என அரசு கூறுகிறது. மருத்துவக் காப்பீட்டை வரவேற்கிறோம், ஆனால் பணி நிரந்தரம் செய்யப்படும் வரை எங்கள் உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என சங்கத்தின் தலைவர் சேதுராஜா தெரிவித்துள்ளார்.


TET ஆசிரியர்கள் சங்கத்தினரும் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர். தங்களுக்கு ரூ.10000 சம்பளத்தில் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையைக் கூட அரசு ஏற்கவில்லை, தங்களுக்கு எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடவில்லை, எங்களுடைய போராட்டம் இன்னும் தீவிரமடையும் என அச்சங்கத்தின் நிர்வாகி இளங்கோவன் அறிவித்துள்ளார்.


இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கையான சம வேலைக்கு சம ஊதியம் பற்றி, மூவர் குழுவை அமைப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுவதை ஏற்க முடியாது, ஏற்கனவே பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன, ஆனால் தீர்வுதான் இல்லை என்றும் இடைநிலை ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். அரசின் அறிவிப்புகள் தங்களுக்கு திருப்தி அளிக்காததால் போராட்டங்கள் தொடரும் என ஆசிரியர்கள் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



No comments:

Post a Comment

Post Top Ad