ஆசிரியர்களுக்கு ஜீரோக் கலந்தாய்வு இல்லை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அறிவிப்புக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் நன்றி..
கடந்த சில தினங்களாக மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு நடத்தப்பட்டது போல் கல்வித்துறையில் புரட்சியை செய்வதாக சொல்லி ஆசிரியர்களுக்கும் ஜீரோ கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது என்ற செய்தி சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி ஒட்டுமொத்த ஆசிரியர்களும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தனர்.
ஆசிரியர் இனத்தின் மீது அளவில்லாத அக்கறை கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும் நிச்சயம் இந்த விஷயத்தில் தலையிட்டு ஆசிரியர்களின் மன உளைச்சலை போக்கிட வேண்டும் என்று அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் சங்கங்களும் எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் இன்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் ஆசிரியர்களுக்கு கட்டாயம் ஜீரோ கலந்தாய்வு நடத்தப்படாது என்ற உறுதிமொழியை அளித்திருக்கிறார்கள்
இது ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பையும் பாராட்டுதலையும் பெற்றிருக்கிறது. இதற்காக ஒட்டுமொத்த ஆசிரியர்கள் சார்பாகவும் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாகவும் கோடான கோடி நன்றியை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பணியிடத்தை இரத்து செய்ததிலிருந்து கல்வித்துறையில் புரட்சிகள் என்ற அடிப்படையில் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் எடுத்துவரும் நடவடிக்கைகளால் மிகுந்த மனச் சோர்வை அடைந்திருந்த ஆசிரியர்கள் மத்தியில், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களின் இந்த அறிவிப்பு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே நிர்வாகப் பணியில் இருக்கக்கூடிய மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை ஜீரோ கலந்தாய்வின் மூலம் நிரப்புவது ஏற்புடையதாக இருக்காது என்ற கருத்தை கல்வித்துறையில் உள்ள பெரும்பாலானவர்கள் வலியுறுத்திய நிலையில், அந்த கலந்தாய்வு நடத்தப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக கல்வித்துறையில் இருக்கக்கூடிய பல்வேறு பிரிவுகளுக்கும் ஜீரோ கலந்தாய்வில் நடத்தலாம் என்ற ஒரு முடிவினை கல்வித்துறை அதிகாரிகள் எடுத்து இருப்பதாக செய்திகள் வந்து கொண்டு இருந்தது. இதுபோன்ற புதிய முயற்சிகளை எடுக்கும் போது அதிகாரிகள் தன்னிச்சையாக தங்களது முடிவுகளை எடுத்து விடாமல், ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகளை குறைந்தபட்சம் அழைத்துப் பேசி முடிவுகளை எடுத்துவிடவேண்டும்.
களத்தில் இருக்கக்கூடிய ஆசிரியர்களின் மனநிலையை நிச்சயம் உணர்ந்து அதற்கேற்ற வகையிலேயே அதிகாரிகள் முடிவினை மேற்கொள்ள வேண்டும்.
எனவே எந்த முடிவுகள் கல்வித்துறையில் எடுத்தாலும், அந்த முடிவுகளை மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலையிட்டு ஆசிரியர்கள் மாணவர்கள் நலன் பாதிக்காத வகையில் முடிவுகளை எடுத்து வேண்டும்.
ஜீரோ கலந்தாய்வுக்கு அமைச்சர் அவர்கள் முற்றுப்புள்ளி வைத்து இருந்தாலும் விரைவில் கலந்தாய்வு சார்ந்து வெளிவர உள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் பத்தாண்டுகள் அல்லது பதினைந்து ஆண்டுகளுக்கு மேல் ஒரே பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களை கட்டாயம் கலந்தாய்வில் கலந்து கொள்ள செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் அளவில் விவாதித்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இதுவும் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்திவிடும். இதுபோன்ற விபரீத முடிவுகள் எல்லாம் தற்போது உள்ள சூழலில் பள்ளிக்கல்வித்துறை எடுப்பதென்பது ஏற்புடையதாக இருக்காது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரும்பான்மையான ஆசிரியர்களை மாணவர்கள் பார்த்திருக்கவில்லை. கொரோனா தொற்றினால் பள்ளிகள் திறக்கப்படாத சூழலில் ஏற்பட்டிருக்கிற இந்த அசாதாரண இடைவெளியை சரி செய்வதற்கு ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்க வேண்டி இருக்கின்ற இந்த சூழ்நிலையில் அனுபவமிக்க ஆசிரியர்கள் அந்த பள்ளியில் ஏற்பட்டுள்ள இடைவெளியை சரி செய்வதில் மிக முக்கியப் பங்காற்றுவர் என்பதை இந்த நேரத்திலே கருத்தில் கொள்ள வேண்டும். இதுபோன்ற முடிவுகளும் மாணவர்களை உளவியல் ரீதியாக பாதித்து நாளடைவில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்த காரணமாக இருக்கும். எனவே விரைவில் வெளிவரவுள்ள கலந்தாய்வு வழிகாட்டு நெறிமுறைகளில் கடந்த ஆண்டுகளில் வெளியிட்டது போன்ற வழிகாட்டு நெறிமுறைகளை இடம்பெற மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். ஆசிரியர்கள் இந்த அரசு மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். அவருடைய நம்பிக்கை வீண் போகாத வண்ணம் கலந்தாய்வு கடந்த காலங்களில் கடைப்பிடிக்கப்பட்ட நெறிமுறைகளை இந்த ஆண்டும் கடைபிடிக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டை பள்ளிக்கல்வித்துறை எடுத்திட வேண்டும். ஆசிரியர் இனத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டு இருக்கின்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலையிட்டால் மட்டுமே இதில் நல்ல முடிவு கிடைக்கும் என்று தமிழகத்தில் உள்ள அத்தனை ஆசிரியர்களும் எதிர்பார்க்கிறார்கள். நிச்சயம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலையிட்டு இதில் ஒரு நல்ல முடிவை அறிவிப்பார் என்று நம்பிக்கையோடு ஆசிரியர்களும் ஆசிரியர் சங்கங்களும் காத்திருப்போம்.என்று அறிக்கையில் கு.தியாகராஜன் தெரிவித்தார்.