நர்சரி பள்ளிகளைத் திறப்பது குறித்த அறிவிப்பு தவறுதலாக வந்துள்ளதாகவும், இது தொடர்பான, தெளிவான சுற்றறிக்கை விரைவில் வெளியாகும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இதுகுறித்து திருச்சி, திருவெறும்பூரில் இன்று அவர் அளித்த பேட்டி:
’’கரோனா அச்சம் காரணமாகக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதில் பெற்றோரிடம் அச்சம் நிலவுகிறது. குழந்தைகளிடையே கற்றல் திறன் குறைந்துகொண்டே இருப்பதால்தான், பள்ளிகளைத் திறக்க வேண்டிய நிலை உள்ளது.
அங்கன்வாடி குழந்தைகளுக்குச் சத்துணவு கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. எனவே அந்தக் குழந்தைகளை அங்கன்வாடிகளுக்கு வரவழைப்பது பற்றி மட்டுமே ஆலோசிக்கப்பட்டது. ஆனால் சுற்றறிக்கையில் நர்சரி பள்ளிகளும் திறக்கப்படுவதுபோல சேர்த்துக் குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக விவாதித்து, தெளிவான சுற்றறிக்கை இன்றோ (அக்.16), நாளையோ வரும்.
பள்ளிக்கு வராத காரணத்துக்காக மாணவர்களை அடிக்கக் கூடாது என அறிவுறுத்தியுள்ளோம். ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி ஒன்றில் மாணவரைத் தாக்கிய ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல சில பள்ளிகளில் ருத்ராட்சம் அணிந்து வரக்கூடாது என ஆசிரியர்கள் கூறியதாகத் தகவல்கள் வருகின்றன. அப்படியெல்லாம் இருக்கக் கூடாது.
பள்ளிக்கு வரக்கூடிய மாணவர்களிடம் எந்தப் பாகுபாடும் காட்டக்கூடாது. மாணவர்களைப் பள்ளிக்குள் அழைப்பதுதான் கடமையாக இருக்க வேண்டும். வெளியே அனுப்புவது நமது வேலையாக இருக்கக் கூடாது என ஆசிரியர்களிடம் அறிவுறுத்தியுள்ளோம்’’.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.