அரசு உதவி பள்ளி நியமனங்கள் புதிய விதிகள் கொண்டு வர பள்ளிக்கல்வித் துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்! - Asiriyar.Net

Friday, January 15, 2021

அரசு உதவி பள்ளி நியமனங்கள் புதிய விதிகள் கொண்டு வர பள்ளிக்கல்வித் துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

 






அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு நியமனங்கள் மேற்கொள்ளும்போது, மாவட்ட கல்வி அதிகாரியின் அனுமதி பெற வேண்டும் என்று விதிகள் கொண்டு வரலாம் என, பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.


திருவாரூர் மாவட்டம், கோனேரிராஜபுரத்தில் உள்ள அரசு உதவி்பெறும் வடமட்டம் மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு முருகன் என்பவர் தேர்வு செய்யப்பட்டார்.


அனுமதிக்கப்பட்ட இப்பணியிடத்துக்கான நியமனத்துக்கு அனுமதிக் கோரி, மாவட்ட கல்வி அதிகாரிக்கு பள்ளி நிர்வாகம் விண்ணப்பித்தது. பள்ளியின் கோரிக்கையை நிராகரித்து, மாவட்ட கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, பள்ளி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.





வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு நியமனங்கள் மேற்கொள்ள அனுமதி பெற அவசியமில்லை என்றும், அனுமதிக்கப்பட்ட பணியிடத்தில் பிற பள்ளிகளில் உபரியாக உள்ள பணியாளர்களை நியமிக்க வேண்டிய தேவையில்லை எனவும் கூறி, மாவட்ட கல்வி அதிகாரியின் உத்தரவை ரத்து செய்துத் தீர்ப்பளித்தார்.



இதை எதிர்த்து பள்ளிக்கல்வித் துறை இயக்குனர், திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி ஆகியோர் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, கடந்த 2014- ஆம் ஆண்டு முதல் காலியாக இருந்த பணியிடத்துக்கு, 4 ஆண்டுகள் தாமதமாக 2018- ஆம் ஆண்டு தான் நியமன நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டதாக, பள்ளிக்கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள்,‘அரசு உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு நியமனம் மேற்கொள்ள மாவட்ட கல்வி அதிகாரியின் அனுமதி பெற வேண்டும் என எந்த விதிகளும் இல்லை. இதுபோன்ற விதிகளை பள்ளிக்கல்வித் துறை வகுக்கலாம். அனுமதிக்கப்பட்ட பணியிடத்துக்கு நியமனம் மேற்கொள்ள பள்ளி நிர்வாகம் எடுத்த நடைமுறைகளைக் குறை கூற முடியாது.’எனத் தெரிவித்த நீதிபதிகள், தனி நீதிபதியின் உத்தரவில் தலையிட மறுத்து, வழக்கை முடித்து வைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad