தைப் பொங்கலை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டத்தில் ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. அதில், முதல் ஜல்லிக்கட்டு போட்டி அவனியாபுரத்தில் நேற்று நடைபெற்றது.
இதில், 430 வீரர்ர்களும், 788 காளைகளும் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது. நேற்று நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியைப் பார்வையிட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும், தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் வருகை தந்தனர். நேற்று, காளையை அடக்கியதில் இருவருக்கு முதல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது. முன்னதாக, மாடுபிடி வீரர்களுக்கு அரசுப் பணி வழங்கவேண்டும் என்று கோரிக்கை நீண்ட காலமாக இருந்துவருகிறது.
இந்தநிலையில், இன்று காலை 8 மணிக்கு பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்கியது. அதனை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கொடியசைத்து தொடங்கிவைத்தார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயகுமார், ‘மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணி வழங்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.முதல்வர் அதற்கான முடிவை அறிவிப்பார்’ என்று தெரிவித்தார்.