தமிழகத்தில் பள்ளி மாணவ மாணவியரின் ரத்த பிரிவு விபரங்களை சேகரிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா நோயின் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனைத்தொடர்ந்து மாணவரின் கல்வி பாதிக்கப்படும் என்பதை கருத்தில் கொண்டு ஆன்லைன் மூலமாகவும் ,கல்வி தொலைக்காட்சி மூலமாகவும் கல்வி கற்பிக்கப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் பள்ளிக்கூடங்கள் செயல்பட்டாவிட்டாலும் மாணவ மாணவியர் சார்ந்த நிர்வாகப் பணிகளை கல்வி துறை மேற்கொண்டுள்ளது. இதனை தொடர்ந்து மாணவ மாணவியரை பற்றிய முழு விபரங்கள் பிழைகள் நீக்கப்பட்டு, கல்வி மேலாண்மை மின்னணு தளத்தில் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது. எனவே அனைத்து மாணவ மாணவியரின் ரத்தப்பிரிவு விபரங்களை சேகரித்து மின்னணு தளத்தில் பதிவு செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் உள்ள மாணவ மாணவியரின் ரத்த பிரிவை பதிவு செய்யும்போது மாணவர்கள் வாய்மொழியாக கூறும் தகவல்கள் தவறாக இருக்கலாம் என்பதால் இரத்த பிரிவை கண்டறியும் சோதனை அறிக்கையை சேகரிக்க அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.