பத்தாம் வகுப்பு வரை, அரசு பள்ளியில் படித்து, அரசு செலவில், பிளஸ் 2 தனியார் பள்ளியில் படித்த மாணவன், மருத்துவம் படிக்க வாய்ப்பின்றி தவிக்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே, தீத்தான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த சேகர் - வாசுகி தம்பதியின் மகன், பரிமள ஈஸ்வரன், 17. இவர், 10ம் வகுப்பு வரை, கறம்பக்குடியில் உள்ள அரசு பள்ளியில் படித்தார். கடந்த, 2017ம் ஆண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், 500க்கு 490 மதிப்பெண்கள் எடுத்து, பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளார்.ஆதிதிராவிடர்ஆதிதிராவிடர் இனத்தைச் சேர்ந்த மாணவர் என்பதால், ஆதிதிராவிட நலத்துறை சார்பில் உணவு, தங்கும் வசதி, கல்வி கட்டணம் போன்ற அனைத்து செலவுகளையும் அப்போது அரசே ஏற்று, தனியார் பள்ளியில் சேர்வதற்கான ஆணையை, மாவட்ட நிர்வாகம் வழங்கியது.
இதன்படி, பட்டுக்கோட்டை லாரல் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்த மாணவர், 2019ல் நடந்த பொதுத்தேர்வில், 600க்கு, 542 மதிப்பெண் எடுத்தார். டாக்டராக வேண்டும் என்ற கனவுடன், 2019ல் நடந்த 'நீட்' தேர்வில், 197 மதிப்பெண் எடுத்தார். மதிப்பெண் குறைவாக இருந்ததால், கடந்த ஆண்டு மருத்துவ, 'சீட்' கிடைக்கவில்லை. தனியார் பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்க வசதி இல்லாததால், வீட்டில் இருந்தபடியே பயிற்சி பெற்று, இந்த ஆண்டு நீட் தேர்வில், 346 மதிப்பெண் பெற்றுள்ளார்.
அகில இந்திய மருத்துவ கலந்தாய்வு இட ஒதுக்கீட்டிலும், தமிழ்நாடு பொது மருத்துவ கலந்தாய்வு இட ஒதுக்கீட்டிலும் விண்ணப்பித்தார்.தனியார் பள்ளிஆனால், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளை தனியார் பள்ளியில் படித்ததால், இரண்டிலும் இடம் கிடைக்க வாய்ப்பில்லாமல் போனது.'முதல் வகுப்பு முதல், 10ம் வகுப்பு வரை, அரசு பள்ளியில் படித்து, அரசு செலவில், தனியார் பள்ளியில், பிளஸ் 2 படித்த என்னை, அரசு பள்ளி மாணவனாக கருதி, 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் இடம் வழங்க வேண்டும்' என, பரிமள ஈஸ்வரன், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கல்வித் துறை மற்றும் மருத்துவத் துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது:தமிழகம் முழுதும் இந்த பிரச்னை உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், அதிக மதிப்பெண் எடுக்கும், 10 ஆதிதிராவிடர் இன மாணவர்களுக்கு, அரசு நிதி உதவி செய்து, தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறது. பரிமள ஈஸ்வரன், அரசு நிதியில் படித்தாலும், தனியார் பள்ளியில் படித்ததால், 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில், மருத்துவக் கல்லுாரியில் சேர்க்க வாய்ப்பு இல்லை. இதற்கு, அரசு தான், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment