பதிவுத்துறையில், 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே இடத்தில் பணியாற்றும் ஊழியர்களை, பணியிட மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக பத்திரப்பதிவுத்துறையில் இளநிலை உதவியாளர், உதவியாளர், தட்டச்சர் என பல்வேறு நிலைகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். இவர்களில், பலர் ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் பலர் புகாரின் அடிப்படையில் டிரான்ஸ்பர் செய்தாலும் கூட, கூட அயல்பணி அடிப்படையில் மீண்டும் அதே இடத்தில் நியமிக்கப்படுகின்றனர்.
இதேபோன்று அயல்பணி அடிப்படையில் 4 ஆண்டுகள் வரை அவர்களை நியமிக்கலாம். இதை பயன்படுத்தி பலர் ஒரே இடத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இது லஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாக பதிவுத் துறைக்கு புகார்கள் வந்தது. இதை தொடர்ந்து பத்திரப்பதிவுத்துறை ஐஜி சங்கர் ஒரே இடத்தில் பணியாற்றும் ஊழியர்கள் விவரங்கள் மற்றும் அயல்பணி அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களின் விவரங்களை அனுப்பி வைக்க மண்டல டிஐஜிக்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து பதிவுத்துறை ஐஜி சங்கர் மண்டல டிஐஜிக்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: பத்திரப்பதிவுத்துறையில் பணிபுரியும் உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் தட்டச்சர்கள் தற்போது பணிபுரியும் அலுவலகத்தில் எந்த தேதி முதல் பணிபுரிந்து வருகிறார்கள் என்ற விவரத்தினை அனுப்பி வைக்க வேண்டும். அயல்பணி அடிப்படையில் வேறு அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் பணியாளர்கள் விவரத்தினையும் தனியாக படிவத்தில் அனுப்பி வைக்க வேண்டும். அந்த படிவத்தில் பணியாளர் பெயர், பணி நியமனம் செய்யப்பட்ட அலுவலகம், தற்போது பணிபுரியும் அலுவலகம், பகராண்மையில் பணிபுரிந்து வரும் அலுவலகம், எந்த தேதி முதல், ஆணை எண்ணும் தேதியும் அதில் குறிப்பிட்டிருக்க வேண்டும்.