கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்களை கீழ்நிலை பணிகளில் நியமிக்கக்கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Sunday, December 13, 2020

கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்களை கீழ்நிலை பணிகளில் நியமிக்கக்கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

 

கூடுதல் கல்வித்தகுதி பெற்றவர்களை கீழ்நிலை பணிகளில் நியமிக்கக்கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு


கூடுதல் கல்வித் தகுதி பெற்றவர்களை கீழ்நிலை பணிகளில் நியமிக்கக்கூடாது. உரிய கல்வித் தகுதி பெற்றவர்களையே அந்தந்த பணிகளில் நியமிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


 



மதுரையைச் சேர்ந்த விஜயலட்சுமி, உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:


சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 11 இளநிலை பொறியாளர் பணியிடத்தை நிரப்புவது தொடர்பாக 1.1.2013-ல் அறிவிப்பு வெளியானது. நான் சிவில் பொறியியல் படித்திருப்பதால் இளநிலை பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்தேன். எழுத்துத்தேர்வில் வென்ற நிலையில் அடுத்த கட்டத் தேர்வுக்கு அழைப்புவரவில்லை.


 


அது குறித்து விசாரித்த போது இளநிலை பொறியாளர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியை விட கூடுதல் கல்வித்தகுதி பெற்றிருப்பதாக கூறி என்னை நிராகரித்திருப்பது தெரியவந்தது. இதை ரத்து செய்து எனக்கு பணி வழங்க உத்தரவிட வேண்டும்.


 


இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.



இந்த மனுவை விசாரித்து நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியன் பிறப்பித்த உத்தரவு:



அரசியலமைப்பு சட்டப்படி அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்க வேண்டும். டிப்ளமோ படிப்பு தகுதியாக உள்ள வேலைக்கு பட்டதாரி பட்டம் பெற்றவர் தகுதியானவர் அல்ல. நம் நாட்டில் ஒவ்வொரு பணிக்கும் குறைந்த பட்ச, அதிக கல்வித்தகுதி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


கட்டாய இலவச கல்வி போன்ற நடைமுறைகளால் நாட்டில் கல்வியறிவு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கிராமத்தில் இருப்பவர்களுக்கும் உயர்கல்வி வாய்ப்பு கிடைக்கிறது.



லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்பின்றி தவிக்கின்றனர்.


குறைந்தபட்ச கல்வித் தகுதியுடன் பலர் பொது வேலைவாய்ப்பை பெறுகின்றனர். குறைந்தபட்ச கல்வித் தகுதி கொண்டவர், அதிக கல்வித் தகுதியை பெற்றவருடன் போட்டியிட முடியாது. இருவரையும் சமமாக பார்க்க முடியாது. அப்படி இருவரையும் ஒரே நிலையில் பார்ப்பது என்பது அடிப்படை உரிமைக்கு எதிரானது.


 


கீழ்நிலை பணிகளுக்கு உயர்க் கல்வி பெற்றோர் தகுதியானவர்கள் அல்ல. கீழ்நிலை பணிகளில் உயர்கல்வித் தகுதி பெற்ற பலர் சேர்கின்றனர். இதனால், குறைந்தபட்ச கல்வித் தகுதி பெற்றோருக்கு உரிய வாய்ப்பு கிடைப்பதில்லை. இவர்களுக்கான வாய்ப்பை அவர்கள் தட்டிப் பறிக்கும் நிலை உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும்.



கீழ் நிலை பணிகளுக்கு அதிக தகுதியுடையோரை நியமிப்பதால் பணிகள் பெரிதும் பாதிக்கிறது. இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரிகளும், பொறியியல் பட்டதாரிகளும் அலுவலக உதவியாளர், துப்புரவாளர், தூய்மைப் பணியாளர் போன்ற பணிகளில் சேர்கின்றனர். இவர்களால் அந்தப் பணியை சரிவர கையாளமுடியவில்லை. அதே நேரத்தில் அவர்கள் வரி செலுத்தும் அளவுக்கு சம்பளம் பெறுகின்றனர்.


சமீபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் இல்லங்களில் பணியாற்றும் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்களின் கல்வித்தகுதியை பார்க்கும் போது மலைப்பாக உள்ளது. அதிக கல்வித்தகுதி கொண்ட அவர்களால் நிர்வாகம் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறது. பலர் உயர் கல்வித் தகுதியை மறைத்து பணியில் சேர்வதால் வேலைவாய்ப்புக்கான நோக்கம் நிறைவேறவில்லை.


 


இரண்டாம் நிலை காவலர் பணிக்கு முதுகலை பட்டதாரிகள், எம்பிபிஎஸ் படித்தவர்களும் விண்ணப்பித்தனர். உயர்க்கல்வித் தகுதி பெற்ற ஒருவரால் கீழ் நிலை பணியை முறையாக செய்ய முடியாது. அனைவருக்கும் சம வாய்ப்பு என்பது தான் சமூக நீதியின் நோக்கம். சமவாய்ப்பு இல்லாத போது எப்படி சமூக நீதி கிடைக்கும்.


 


எனவே, கீழ் நிலை பணிகளில் கூடுதல் தகுதி பெற்றவர்கள் நியமிப்பதை தவிர்த்து, அந்தந்த பணியின் தகுதிக்கு ஏற்ற உரிய கல்வித் தகுதியை பெற்றவர்கள் மட்டும் நியமிக்கப்படுவதை தலைமை செயலர், உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் ஆகியோர் உறுதிப்படுத்த வேண்டும்.


 

மனுதாரர் இளநிலை பொறியாளர் பணிக்குரிய கல்வித்தகுதியை மனுதாரர் பெறவில்லை. எனவே மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.


 


இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

Post Top Ad