பள்ளி மாணவர்களின் பறக்கும் கனவை நிறைவேற்றிய ஆசிரியர் குறித்து இந்த செய்தியில் காணலாம். சிறு வயது குழந்தைகளுக்கு பேருந்து, ரயில்களை விட விமானத்தை பார்த்தால் ஒரு வித வியப்பையும், குதூகலத்தையும் ஏற்படுத்தும். இன்றும் பள்ளி மாணவர்கள் சாலையில் செல்லும் போது வானத்தில் விமானம் பறந்தால் ஒருவித ஆச்சரியத்துடன் கண்டு ரசிப்பதுண்டு. அந்த வகையில், அரசு பள்ளி மாணவர்களின் விமானத்தில் பறக்கும் ஆசையை தலைமை ஆசிரியர் நிறைவேற்றியுள்ளார்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கொண்டலூர் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 107 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். ஓராண்டுக்கு முன்பு மைக்கேல் ராஜ் என்ற ஆசிரியர், இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். ஆசிரியர் பணி மீதும், கல்வி கற்கும் மாணவர்கள் மீதும் மிகப்பெரும் மரியாதை கொண்ட நபராக தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ் அவர்களிடம் எளிமையாக பழகி வந்துள்ளார்.
எப்படி சார் வானத்தில் பறக்க முடியும்?
இதுபோன்ற சூழ்நிலையில் மாணவர்களுக்கு கல்வியை தாண்டி வெளி உலகத்தை அறிந்து கொள்ளும் வகையில், அவ்வப்போது மாணவர்களை வெளியே அழைத்து சென்று வருகிறார்.
குறிப்பாக கொண்டலூர் என்பது சாதாரண கிராமம் என்பதால் இங்கு பெரும்பாலும் ஏழை, எளிய நடுத்தர மக்களின் குழந்தைகள் தான் பாடம் கற்க வருகின்றனர். ஒரு முறை விமானம் தொடர்பான பாடம் நடத்தும் போது, அது எப்படி சார் வானத்தில் பறக்க முடியும்? என வேடிக்கையாக மாணவர்கள் கேட்டுள்ளனர். எனவே மாணவர்களை விமானத்தில் நிஜமாகவே பறக்க வைக்க வேண்டும் என மைக்கேல் ராஜ் ஆசைப்பட்டுள்ளார்.
அதன்படி கடந்த ஆண்டு ஐந்தாம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளை தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ் தனது நண்பர்களின் பங்களிப்பின் மூலம், சொந்த முயற்சியில் விமானத்தில் சென்னைக்கு சுற்றுலா அழைத்துச் சென்றார். இந்நிலையில், கடந்த ஆண்டு தங்கள் சீனியர்களை அழைத்துச் சென்றது போல தங்களையும் விமானத்தில் அழைத்து செல்ல வேண்டுமென தற்போது ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.
விமானத்தில் பயணித்த அரசு பள்ளி மாணவர்கள்
இதனைடுத்து மீண்டும் தனது நண்பர்கள் மற்றும் முக்கிய நபர்களின் பங்களிப்போடு இந்த ஆண்டு ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களையும், விமானத்தில் அழைத்துச் செல்ல மைக்கேல் ராஜ் திட்டமிட்டார். மூன்று மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு, அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வந்தார். குறிப்பாக ஒரு மாதத்திற்கு முன்பே விமானத்தில் அழைத்துச் செல்ல 21 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதற்காக அவர் மாணவர்களுக்கு போட்டி ஒன்றை வைத்துள்ளார்.
வாய்ப்பாடு சொன்னதால் விமான பயணம்
அதன்படி வாய்ப்பாடு கூறும் மாணவர்களை விமானத்தில் அழைத்துச் செல்வதாக தெரிவித்துள்ளார். எனவே மாணவர்களும் ஆர்வமுடன் வாய்ப்பாடு பார்க்காமல் கூறி போட்டியில் தேர்வாகினர். பின்னர் 21 மாணவர்கள், சக ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், சத்துணவு அமைப்பாளரையும் இன்று (மார்ச் 7) விமானத்தில் அழைத்துச் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்தார். திட்டமிட்டபடி இன்று மாணவர்களை தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ் சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் சென்றார். முன்னதாக அதிகாலை மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் குதூகலமாக பள்ளிக்கு வந்தனர்.
விமானத்தில் செல்லும் மகிழ்ச்சியில் மாணவர்கள் துள்ளி குதித்தனர். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் விமானத்தில் பறக்க இருப்பதை நினைத்து பூரிப்போடு நின்றனர். நம்மால் நிறைவேற்றிக் கொடுக்க முடியாத ஆசையை தலைமையாசிரியர் நிறைவேற்றிக் கொடுத்தது எண்ணி பெற்றோர்கள் பெருமை அடைந்தனர். மொத்தம் இரண்டு நாள் இந்த பயணம் திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை சுற்றுலா
இதன்படி இன்று சென்னை சென்று மெரினா கடற்கரை, பிர்லா கோளரங்கம், கலங்கரை விளக்கம் போன்ற இடங்களை சுற்றி பார்க்கின்றனர். தொடர்ந்து நாளை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாணவர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர். எனவே இரண்டு நாட்களுக்கு தேவையான துணிகளை பேக் செய்து மாணவர்கள் உற்சாகமுடன் பள்ளியில் இருந்து கிளம்பினர். பெற்றோர்கள் அவர்களை ஆனந்த கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தனர். தூத்துக்குடி விமான நிலையம் சென்றதும் மாணவர்களுக்குள் உற்சாகம் மேலும் தொற்றிக்கொண்டது.
அப்போது தலைமை ஆசிரியர் மைக்கேல் ராஜ் விமான நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். பின்னர் மாணவர்கள் எதிர்காலத்தில் வெளி உலகில் ஏற்படும் பிரச்சனைகள எதிர்கொள்ளும் வகையில் அவர்களே டிக்கெட் பரிசோதனை, லக்கேஜ் பரிசோதனை போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட வைத்தார். எனவே மாணவர்கள் தனியாகவே பாதுகாவலர்களிடம் சென்று தங்கள் டிக்கெட்டை காண்பித்து உள்ளே சென்றனர்.
மேலும் உடைமைகளையும் தனியாகவே சென்று சோதனை செய்தனர். அனைத்து சோதனையும் முடிந்த பிறகு ஓடுதளத்தில் கண்ணெதிரே விமானம் இருப்பதை பார்த்து ஒரு நிமிடம் திகைத்துப் போனார்கள். பின்னர் விமானத்தில் ஏறி ஆனந்தமாக சென்னைக்கு பயணித்தனர் இதுகுறித்து இஷாந்த் என்ற மாணவர் நம்மிடம் கூறுகையில், ”எங்களது ஆசிரியர் எங்களை விமானத்தில் அழைத்து செல்கிறார். மிகவும் ஆர்வமாக இருக்கிறது, கீழே இருந்து தான் மேலே விமானத்தை பார்த்திருக்கிறோம். ஆனால் ஆசிரியர் இப்போது எங்களை விமானத்தில் அழைத்துச் செல்கிறார்.
ஆசிரியர் எங்களுக்கு சின்ன வாய்ப்பாடு போட்டி வைத்தார்கள். அதில் வெற்றி பெற்றதும் எங்களை அழைத்து செல்கிறார். எங்கள் பெற்றோரிடம் இது போன்ற விமானத்தில் அழைத்து செல்லும்படி கேட்டோம், பார்ப்போம் என்று கூறினார்கள். ஆனால் ஆசிரியர் எங்களை அழைத்துச் செல்வது சந்தோஷமாக இருக்கிறது” என்று கூறினார்.
இது குறித்து மாணவி ராஜ வைஷ்ணவி கூறுகையில், ”இதுவரை நாங்கள் விமானத்தை மேகத்தில் தான் பார்த்திருக்கிறோம். எங்களது சார் தான் முதன் முதலாக எங்களை விமானத்திற்கு அழைத்து செல்கிறார், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இரண்டாம் வாய்ப்பாடு முதல் 16ஆம் வாய்ப்பாடு வரை கூறும்படி சொன்னார். நாங்கள் கூறியதால் எங்களை அழைத்துச் செல்கிறார்” என்றார்.
பள்ளிக்கூடம் என்பது மாணவர்களுக்கு கல்வியை கற்றுக் கொடுக்கும் இடமாக மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் அனைத்து விஷயங்களிலும் சிறந்து விளங்க மாணவர்களை தயார் செய்யும் ஒரு இடம் என்பதை தலைமையாசிரியர் மைக்கேல் ராஜ் இந்த விமான பயணம் மூலம் நிரூபித்துள்ளார், அவருக்கு நமது பாராட்டுக்கள்.


No comments:
Post a Comment