அண்மையில் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (Tamilnadu Assured Pension Scheme) பற்றிய பேச்சு தான். எங்கும். இது ஏற்கனவே உள்ள பழைய ஓய்வூதியத் திட்டமும் தற்போது நடைமுறையில் உள்ள பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமும் இணைந்த ஒரு கலவையான திட்டமாகும்.
அதாவது பழைய ஓய்வூதியத் திட்டத்தில் காணப்படுவதைப் போன்று பணி ஓய்வு பெற்றிருக்கும் ஆண்டின் சராசரி ஊதியம் அல்லது கடைசி மாத ஊதியத்தில் 50% அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம் மற்றும் 25 இலட்சத்திற்கு மிகாமல் பணிக்கொடை ஆகியவை இதில் அடங்கும். மேலும், ஏப்ரல் 1, 2003 முதல் நடைமுறையில் இருந்து வரும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மாத ஊதியத்தில் 10% பங்களிப்புத் தொகையுடன் அரசின் பங்களிப்பு மற்றும் வட்டி ஆகியவற்றுடன் 18% தொடரும் என்பதும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதவிர, ஏற்கெனவே பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்குக் கருணை அடிப்படையிலான ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற முன்மொழிவு என்பது கௌரவமான பதவிகளில் பணிபுரிந்து பணி ஓய்வு பெற்று தமக்குத் தம் வாழ்நாளில் ஒரேயடியாக கிடைக்கப்பெற்ற பங்களிப்பு ஓய்வூதியத் தொகையைக் கொண்டு மகன்/மகளின் கல்வி/திருமண முதலான சுப காரியங்களுக்கு ஒட்டுமொத்தத்தையும் செலவிட்டு பின்னர் அன்றாட பிழைப்பிற்காகக் தினசரி கூலி வேலைக்குச் செல்பவர்கள் அனைவருக்கும் இது ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
எட்டாவது ஊதியக் குழுவிற்கு பின்னர், இனி பழைய, புதிய ஓய்வூதியதாரர்களுக்கு விலைவாசி புள்ளிகளுக்கு ஏற்ப வழங்கப்படும் சொற்ப அகவிலைப்படி உயர்வு குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்கிற முன்னோட்ட கருத்து நாடு முழுவதும் பரவி வரும் சூழலில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள இப்புதிய TAPS திட்டத்தில் ஆண்டிற்கு இருமுறை அகவிலைப்படி உயர்வு சேர்த்து வழங்கப்படும் என்று கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது.
இந்திய பொருளாளாதாரத்தின் ஆணிவேரில் வெந்நீர் ஊற்றி அழித்துக் கொண்டிருப்போரின் விசுவாச அடிமைகள் பிதற்றும் 'ஒரு கோடி அப்பு ; இரண்டு கோடி அப்பு' என்பதற்கு உரிய, உகந்த காரண காரியங்களைக் கருத்தில் கொள்ளாமல் உணர்ச்சி வசப்பட்டு, 'ஆமாம், ஆமாம்' என்று சமூக ஊடகங்களில் போர் முழக்கமிடுவதும் எள்ளி நகையாடுவதும் வியப்பாக உள்ளது. அத்தகையோர் ஆளும் மாநிலங்களில் எல்லாம் பழைய ஓய்வூதியத் திட்டம் என்ன கங்கை ஆறாகவா பால்வார்த்துப் பாய்ந்து கொண்டிருக்கிறது? ஆடுகள் நனைகிறதே என்று இப்போது பல ஓநாய்கள் அழ ஆரம்பித்துள்ளன. ஏனெனில், இது தேர்தல் காலம்!
இவர்கள் வாகாக அரசின் பங்களிப்பு நிதிப் பகிர்வை உண்மையோடு சேர்த்துப் புதைத்து விட்டார்கள். இந்த உறுதியளிப்பு ஓய்வூதியத்திற்கு பழைய பங்களிப்பு ஓய்வூதியமே தேவாமிர்தம் மிக்கது என்பதை ஆழ நிலைநிறுத்த முயற்சிக்கும் நுண் அரசியல் ஆகும். இந்த பலிபீடத்தில் மீளவும் அகப்படும் ஆடுகளாக அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் ஆகிவிடக் கூடாது. அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது இலக்கு. அதன் முதல்படி உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டம் என இப்போதைக்குக் கருதுவதே சாணக்கியம்.
அதற்குள் எதிரிக்கு எதிரி நண்பன் என்று தரம் தாழ்ந்து விமர்சனம் செய்யும் நோக்கும் போக்கும் அதிகரிப்பதால் பயனொன்றும் விளையப் போவதில்லை. ஏனெனில், அவர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை இன்னும் எதிரிகள் பட்டியலில் தான் வைத்துள்ளனர் என்பதே நடப்பு உண்மை. தற்போதைய முக்கிய எதிர்க்கட்சி இத்தனைக் களேபரத்தையும் ஒட்டுமொத்தமாக அறுவடை செய்யும் நோக்கில் பேச்சுக்குக் கூட பழைய ஓய்வூதியத் திட்டம் உறுதியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று சொல்லாதது எண்ணத்தக்கது.
இத்திட்டத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. இருக்கிறது. அவற்றை அரசால் நிச்சயம் சரிசெய்ய முடியும். அதற்காக பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம் என்று பிதற்றுவது பேதைமை. குறைந்த பணிக்காலம் கொண்டவர்களுக்கு இந்த உறுதியளிப்பு ஓய்வூதியம் மிகுந்த பலனளிக்க வல்லது. முப்பதுக்கும் மேற்பட்ட பணிக்காலம் துய்ப்பவர்களுக்கு சற்று ஏமாற்றம் அளிக்கவல்லது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
அதுபோல், இதுநாள்வரை ஊழியர் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பங்களிப்புத் தொகையை வட்டியுடன் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளதைப் போன்று ஆசிரியர் சேமநல வைப்புநிதியாக மடைமாற்றம் செய்வது என்பது இன்றியமையாதது. அல்லது இனிவரும் காலங்களில் ஊதியத்தில் 10% கட்டாய பிடித்தத்தை முற்றிலும் கைவிட அரசு பரிசீலிப்பது நல்லது. இங்கு ஒன்றை யாவரும் நினைவில் கொள்வது அவசியம். அதாவது இத்தகையோருக்குப் பழைய ஓய்வூதியம் ஒருக்காலும் வழங்கப்படக் கூடாது என்று சொல்லப்படவில்லை. அந்த இறுதி இலக்கில் எந்தவொரு சமரசமும் இல்லை.
அது நாள்வரை தற்போதைய உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டத்தைப் பகுதியளவேனும் சம்மந்தப்பட்டவர்கள் ஏற்கத்தக்க திருத்தம் மற்றும் சீரமைப்பு ஆகியவற்றிற்கான கருத்து இதுவாகும். கட்டுண்டோம்; இன்னும் கொஞ்ச காலம் பொறுத்திருத்தல் என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது என்பதை நினைவில் கொள்க.
இதற்கிடையில், தமக்கு ஒரு கண் போனால் பரவாயில்லை; அடுத்தவருக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என்று சாபமிடுவது ஒருபோதும் சாலச்சிறந்தது ஆகாது. அதாவது, பழைய ஓய்வூதியம் பெறுவோருக்கும் தமிழ்நாடு அரசு உறுதியளிப்பு ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்துவதில் அறமுண்டோ? சங்கவாதிகள் அனைவரும் பழைய ஓய்வூதியவாதிகள். அவர்களுக்கு எங்கள் துயரம் புரியாது என்று கருதுவது அறிவீனம். வாய்ச்சொல் வீரராகவும் சமூக ஊடக புரட்சியாளராகவும் இருப்பது என்பது எளிது. இன்றைய சூழலில் இயக்கவாதியாக இருப்பது என்பது பெரும் துயரம். கொஞ்சம் கூட மரியாதை என்பது அவர்களுக்குத் துளி கூட இல்லை என்பதே நடப்பு உண்மை.
முதலாளித்துவமும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமும் மலிந்து வரும் சூழலில் தனியார் துறை பங்களிப்புடன் கூடிய அரசு சாரா ஊழியர்கள் தொகுப்பூதியத்தில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் பணிபுரியும் நிலையில் எதிர்வரும் காலங்களில் போராட்டம் நடத்துவது என்பது அரிதாகி விடக்கூடும். இன்றுள்ள நிலையில் யாரும் எந்தவொரு பள்ளியையும் கடந்த காலத்தைப் போல அவ்வளவு எளிதில் பூட்டு போட்டு விட முடியாது. நிரந்தர பணியிடத்திற்கு ஈடாக இன்று தற்காலிக ஆள்கள் ஒவ்வொரு பள்ளியிலும் நிறைய பேர் உள்ளனர். இஃது அரசுக்குத் தெரியாமலும் இல்லை. சங்கவாதிகளுக்குப் புரியாமலும் இல்லை.
ஆளுக்கொரு பிரச்சினை ; ஆளுக்கொரு கோரிக்கை என்பதாக ஒன்றிணைந்த இயக்கங்களுக்குள் ஓராயிரம் பிளவுகள். ஒரு போராட்டத்தை முன்னெடுத்து வெற்றிகரமாக நடத்துவதில் ஏராளம் சிக்கல்கள். உண்மையாகவே பாதிக்கப்பட்டோர் தமக்குள் கூடிப் பேசி அற்ப காரணங்களுக்காக போராட்டக் களத்திற்கு வருவதில்லை. ஒரு பாதிப்பும் அற்றவர்கள் ஆற்றாமையில் புலம்பி வெதும்பி 'போங்கடா போக்கத்தப் பயலுவளா!' என்று ஒதுங்கிக் கொள்ளும் போக்கு மிகுந்து வருவது என்பது அபாயகரமானது. தடியெடுத்தவர்கள் எல்லாம் தண்டல்காரர்கள் என்பதாக யாரும் யார் பேச்சையும் கேட்பதாக இல்லை. ஒவ்வொருவரும் சங்கத் தலைமைவாதியாக நுனிப்புல் மேய்ந்தும் பல்வேறு சமூக ஊடக வதந்திகளை, வாந்திகளை நம்பியும் வீராவேச அறிக்கையை தரம் குறைந்த வகையில் வீசி எறிவது யாருக்கும் நல்லதல்ல.
முடிவாக, மாபெரும் கனவாக இருக்கும் அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நனவாகப் போராடுவோம். அதற்கிடையில், புதிதாய் வந்துள்ள தமிழ்நாடு அரசு உறுதியளிப்பு ஓய்வூதியத்தை மறுசீரமைக்க வாதாடுவோம். அடித்தாலும் அழும் குழந்தை மறுபடியும் அடித்த அன்னையிடமே மீண்டும் மீண்டும் அடைக்கலம் புகும் என்பதே உண்மை. அதேவேளையில், தமிழக அரசு தம் சொந்த பிள்ளைகளான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களைக் கண்டித்ததும் தண்டித்ததும் போதும்! அவசர அவசியம் கருதி கருணைத்தாயாக மாற வேண்டும்!
எழுத்தாளர் மணி கணேசன்

No comments:
Post a Comment