அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் கோரிக்கையைப் போலவே, இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் கேட்கும் போராட்டமும் திமுக-வுக்கு இந்தத் தேர்தலில் பெரும் சவாலாக அமைந்திருக்கிறது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ல் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஓர் அடிப்படை ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ம் தேதி பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு மற்றொரு அடிப்படை ஊதியமும் அப்போதைய திமுக ஆட்சயில் நிர்ணயிக்கப்பட்டது. இதன் மூலம் ஒரே ஒரு நாள் வித்தியாசத்தில் இடைநிலை ஆசிரியர்களின் அடிப்படை ஊதியம் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் சுமார் 20 ஆயிரம் பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இந்த முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி ஆசிரியர்கள் 15 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து நாலரை ஆண்டுகளாகியும் ஊதிய முரண்பாடு களையப்படாததால் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ), கடந்த டிசம்பர் 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் முக்கிய இடங்களில் ஆசிரியர்கள் போராடுவதும், அவர்களை போலீஸார் கைதுசெய்து பின்னர் விடுவிப்பதும் தொடர்கிறது.
இதற்கிடையே அரையாண்டு விடுமுறை முடிந்து கடந்த ஜனவரி 5-ம் தேதி முதல் பள்ளிகளும் திறக்கப்பட்டுவிட்டன. ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் ஊதியம் வழங்கப்படாது என்று பள்ளிக் கல்வித் துறையும் எச்சரித்தது. எனினும், இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்கின்றனர். இதனால் மாணவர்களின் கற்றல் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும், அதிமுக, பாமக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள், இதர ஆசிரியர் சங்கங்கள் உட்பட பல்வேறு தரப்பிலும் போலீஸாரின் கைது நடவடிக்கையை கண்டித்து வருகின்றனர். இதனால் உரிமைக்கானதாக இருந்த ஆசிரியர் போராட்டம் தற்போது தேர்தல் அரசியலாக மாறத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக பெறப்பட்ட தகவல்கள் வருமாறு:
ஜே.ராபர்ட் - எஸ்எஸ்டிஏ பொதுச் செயலாளர்: தமிழகத்தில் 6-வது ஊதியக் குழு அமல்படுத்தும் வரை இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் 22 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்தது. 6-வது ஊதியக் குழுவில் அது முழுவதும் மறுக்கப்பட்டது. இடைநிலை ஆசிரியர்களை தவிர மற்ற ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், அடிப்படை ஊதியம் குறைக்கப்பட்டதால், ஒரே கல்வித் தகுதி, ஒரே பணி இருந்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இடையேயான ஊதிய முரண்பாடு ரூ.17 ஆயிரம் வரை உள்ளது.
இதை களையத்தான் போராடி வருகிறோம். மாநில அரசில் பணியாற்றும் சக ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தைத்தான் கேட்கிறோம். டிப்ளமோ படித்தவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தைவிட குறைவாகவே எங்கள் ஊதியம் உள்ளது. எனவே, தேர்தல் வாக்குறுதியின்படி தமிழக அரசு எங்களை அழைத்துப் பேசி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில் போராட்டத்தை கைவிடமாட்டோம்.
வைகைச்செல்வன் - அதிமுக முன்னாள் அமைச்சர்: திமுக அரசு ஆட்சியை நிறைவு செய்யவுள்ள நிலையில் தலைநகர் சென்னை முழுவதும் போராட்டக்களமாக மாறியுள்ளது. மக்களை தெருவில் வந்து போராட வைப்பதுதான் திமுக அரசின் 5 ஆண்டுகால சாதனை. சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியைத்தான் இடைநிலை ஆசிரியர்கள் நிறைவேற்றக் கோருகின்றனர். அவர்களின் கோரிக்கை நியாயமானது.
இப்போது பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னும் போராட்டம் தொடர்வது, அரசுப் பள்ளி குழந்தைகளின் கல்வியை பாதிக்கும். எனவே திமுக அரசு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை அழைத்துப் பேசி, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி, அவர்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக பொங்கல் திருநாளைக் கொண்டாட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - திமுக: செய்தித்தொடர்பு பிரிவு செயலாளர் தற்போது தான் அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கையான ஒய்வூதிய விவகாரத்தில் சிறந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் ரூ.13 ஆயிரம் கோடி நிதிப்பொறுப்பையும் தமிழக அரசு ஏற்றுள்ளது. இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் சார்ந்த கோரிக்கையில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.
தேர்தல் வாக்குறுதியின்படி அதை சரிசெய்வதற்கு அரசுக்கு போதிய அவகாசம் தேவைப்படுகிறது. இதை தெளிவாக விளக்கிய பிறகும் ஆசிரியர்கள் போராடுவது தேவையற்ற நெருக்கடியையே உருவாக்கும். அவர்களின் நோக்கத்தின் மீதும் கேள்வி எழும். எனவே, ஆசிரியர்கள் தங்கள் மீதான நம்பகத்தன்மையை இழக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment