அதிகாரிகள் பேச்சுக்கு அழைப்பதாக கூறி ஆசிரியர்களை கைது செய்த போலீசார் - Asiriyar.Net

Thursday, January 1, 2026

அதிகாரிகள் பேச்சுக்கு அழைப்பதாக கூறி ஆசிரியர்களை கைது செய்த போலீசார்

 



சென்னையில் ஆறாம் நாளாக போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்களை, 'அரசு அதிகாரிகள் பேச அழைத்துள்ளனர்' எனக் கூறி, அழைத்து சென்று, காத்திருக்க வைத்து, பின்னர் கைது செய்தது, ஆசிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


'சம வேலைக்கு சம ஊதியம்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில், சென்னையில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. அந்த வகையில், சென்னை டி.பி.ஐ. வளாகம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், எழிலகம், வட்டாரக் கல்வி அலுவலகம் ஆகிய இடங்களில், கடந்த ஐந்து நாட்களாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.


நுழைவு வாயில்

ஆறாம் நாளாக இன்று(டிச.,31), இடைநிலை ஆசிரியர்கள், தங்கள் குழந்தைகளுடன், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். டி.பி.ஐ., வளாக நுழைவு வாயிலில் அமர்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பினர்.


ஆசிரியர்களின் போராட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தின் மாநிலச் செயலர் அமுதா, சி.பி.எஸ்., மாநில ஒருங்கிணைப்பாளர் கண்ணன் ஆகியோர் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.


அதைத் தொடர்ந்து, போராட்ட களத்தில், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தின் பொதுச் செயலர் ராபர்ட் பேசுகையில், 'முதல்வரின் முதன்மை செயலர் அனுஜார்ஜ், பள்ளிக்கல்வித்துறை செயலர் சந்திரமோகன் ஆகியோர் பேச அழைத்து உள்ளனர். 'பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, அரசாணை வெளியீடும் வரை போராட்டம் தொடரும்' என்றார்.


அதன்பின், போலீசாரின் வாகனத்தில், ஐந்து மாநில நிர்வாகிகள் புறப்பட்டு சென்றனர். ஆனால், போலீசார் தலைமைச் செயலகம் அழைத்து செல்லாமல், போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு, நிர்வாகிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர். பின், பேச்சு நடத்த, அதிகாரிகளுக்கு போதிய நேரம் இல்லை என தெரிவித்தனர்.


திருமண மண்டபம்

அதன்பின், மீண்டும் டி.பி.ஐ., வளாகம் திரும்பிய ஆசிரியர்கள், தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இதையடுத்து, அவர்களைப் போலீசார் கைது செய்து, திருமண மண்டபங்களில் அடைத்தனர்.


இது குறித்து, சங்கத்தின் பொதுச் செயலர் ராபர்ட் கூறுகையில், ''இடைநிலை ஆசிரியர்கள் ஆறு நாட்களாக போராடி வருகிறோம். ''ஆனால், இன்றளவும் எங்களை பேச்சுக்கு அழைக்க, அதிகாரிகளுக்கு நேரம் இல்லை. அரசும், அதிகாரிகளும், எங்கள் கோரிக்கைகளை அலட்சிய போக்குடன் செயல்படுகின்றனர்,'' என்றார்.


No comments:

Post a Comment

Post Top Ad