TET கட்டாயத் தீர்ப்பு மறுசீராய்வு - கருணை அல்ல, சட்டப் பிழை திருத்தம்! - Asiriyar.Net

Saturday, December 20, 2025

TET கட்டாயத் தீர்ப்பு மறுசீராய்வு - கருணை அல்ல, சட்டப் பிழை திருத்தம்!

 



TET கட்டாயத் தீர்ப்பு : மறுசீராய்வு என்பது மூத்த ஆசிரியர்களுக்கான கருணை அல்ல ; சட்டப் பிழையைச் சரிசெய்யும் கடமை !


ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் மத்திய அரசு தலையிட விரும்பவில்லை என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மத்திய அரசும் மறுசீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்புக்காகக் காத்திருக்கலாம்.


எனவே, மூத்த ஆசிரியர்கள் தங்களுக்கான நீதியைப் பெற, சட்டப் போராட்டத்தை அறிவுப் பூர்வமாகவும் அதிகக் கவனத்தோடும் நடத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. இச்சட்டப் போராட்டத்தில், தீர்ப்பில் உள்ள சட்டபூர்வ பிழைகள் மற்றும் சட்ட நெறி மீறல்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும். ஆசிரியர் தரப்பிலான நியாயங்களை நீதிமன்றத்தில் மட்டுமின்றி, மத்திய, மாநில அரசுகளின் கல்வி அதிகார அமைப்புகளுக்கும், பொது வெளியிலும் எடுத்துரைக்க வேண்டும்.


தீர்ப்பில் உள்ள சட்டப்பூர்வ பிழைகள் :


பணிப் பாதுகாப்பு புறக்கணிப்பு : தேசிய ஆசிரியர் கல்விக் கவுன்சில் (NCTE) 23 ஆகஸ்ட் 2010 அன்று வெளியிட்ட அறிவிப்பின் பத்திகள் 4 மற்றும் 5-ல் கூறப்பட்டுள்ள பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான பணிப் பாதுகாப்பை உச்சநீதிமன்றம் கவனத்தில் கொள்ளாமல் தீர்ப்பளித்துள்ளது. இதுவே ஒரு முக்கியமான சட்டப்பூர்வ பிழையாகும்.


அறிவிப்பின் நோக்கம்: NCTE-யின் 23 ஆகஸ்ட் 2010 அறிவிப்பு, வருங்காலப் பணி நியமனங்களுக்கு மட்டுமே TET தேர்ச்சியைக் கட்டாயக் குறைந்தபட்சத் தகுதியாக அறிவித்தது. வழக்கின் முதன்மையான சட்ட ஆவணம் இதுவேயாகும். கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் NCTE ஓர் கல்வி அதிகார அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அதன் அறிவிப்பில் உள்ள விதிகள் அனைத்தும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.


பழைய ஆசிரியர்களுக்கான விதிவிலக்கு : புதிய குறைந்தபட்ச தகுதி விதிகள் (TET உட்பட) அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஏற்கனவே சட்டப்படி நியமிக்கப்பட்ட ஆசிரியர்களைப் பாதுகாப்பதற்காகவே பத்திகள் 4 மற்றும் 5 உருவாக்கப்பட்டன. 2001 மற்றும் அதற்கு முன்னர் வரையறுக்கப்பட்ட தகுதிகளின் அடிப்படையில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களின் வேலை, சம்பளம், பதவி உயர்வு மற்றும் ஓய்வூதிய உரிமைகள் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்துடன் இந்த விதிகள் கொண்டு வரப்பட்டன.


நிரந்தரப் பணிப் பாதுகாப்பு : TET-யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்ட விதிகள் ஆசிரியர்களுக்குத் தற்காலிகமானவை அல்ல; நிரந்தரப் பணிப் பாதுகாப்பு வழங்கும் விதிகளாகப் பார்க்கப்பட வேண்டும். ஏனெனில், ஆசிரியர்கள் நியமிக்கப்பட்ட காலத்தில் TET கட்டாயத் தகுதி அல்ல. எனவே, பல ஆண்டுகள் சேவை செய்த ஆசிரியர்களுக்குப் பின்னர் கொண்டு வந்த விதிகளைப் பின்னோக்கி (retrospective) பயன்படுத்துவது நியாயமற்றது.


சட்டத் திருத்தத்தின் நோக்கம் : RTE திருத்தச் சட்டம் 2017-ஐ நிறைவேற்றுவதற்கான சட்ட முன்வரைவில், NCTE 23 ஆகஸ்ட் 2010-ல் உள்ள விதிகள் 4 மற்றும் 5-ஐ வலுவற்றதாக்குவதற்கான எந்த அம்சங்களும் இடம் பெறவில்லை.


NCTE பிரமாணப் பத்திரம் : உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது NCTE தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம், ஏற்கனவே வெளியிடப்பட்ட அறிவிப்பாணைக்கு முரணாக இருந்தால், அதுவும் சட்டப்பூர்வ பிழையாகக் கருதப்பட வேண்டும்.


மறுசீராய்வின் அவசியம் :


NCTE அறிவிப்பின் பத்திகள் 4 மற்றும் 5 வழங்கிய சட்டபடியான பாதுகாப்பையும், தர்க்க நியாயங்களையும் நீதிமன்றம் முழுமையாக மதிக்க வேண்டும். பல ஆண்டுகள் பணி அனுபவம் கொண்ட ஆசிரியர்களை, அவர்களது பணிக்காலத்தின் இடையிலோ அல்லது கடைசிக் கட்டத்திலோ TET எழுதக் கட்டாயப்படுத்துவது சட்ட நெறிமுறைகளுக்கும், இயற்கை நீதிக்கும் எதிரானது.


எனவே, ஆசிரியர்கள் தரப்பிலான மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளின் தரப்பிலான மறுசீராய்வு மனுக்களை ஏற்று, தீர்ப்பில் உள்ள பிழைகளைச் சரிசெய்வது என்பது உச்ச நீதிமன்றத்தின் கருணையால் நடப்பது அல்ல. தீர்ப்பில் உள்ள சட்டப்பூர்வ பிழைகளைச் சரிசெய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசியலமைப்புச் சட்டத்தால் உச்ச நீதிமன்றத்திற்கு விதிக்கப்பட்டுள்ளது.


முடிவுரை:


இதன் விளைவாக, NCTE வெளியிட்டுள்ள 23 ஆகஸ்ட் 2010 அறிவிப்பின் அடிப்படையில், TET கட்டாயம் என்பது புதிய நியமனங்களுக்கு மட்டுமே பொருந்த வேண்டும். ஏற்கனவே பணியில் இருக்கும், குறிப்பாக நீண்ட காலச் சேவை செய்த ஆசிரியர்களுக்கு, NCTE அறிவிப்பின் பத்திகள் 4 மற்றும் 5 அடிப்படையில், முழுமையான விலக்கு அல்லது நிரந்தரப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.


சு.மூர்த்தி, ஆசிரியர், காங்கயம்.


No comments:

Post a Comment

Post Top Ad