தமிழ்நாடு முழுவதும் வரைவு வாக்காளா் பட்டியல் டிச. 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெளியிடப்படவுள்ள நிலையில், சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது, பிஎல்ஓக்கள் அளித்த படிவங்களைப் பூர்த்தி செய்து கொடுத்தவர்கள், தங்களது பெயர்கள் சரியாக இடம்பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
மேற்குவங்கம், ராஜஸ்தான், கோவா மாநிலங்களில் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் முடிந்து வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியான நிலையில், அதில் சுமார் ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில்தான், தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தமிழகத்தில் வீடு, வீடாக விண்ணப்ப படிவங்களை வாக்கு மைய நிலை அலுவலர்கள் வழங்கினர். இந்த விண்ணப்ப படிவங்களை நிரப்பி திருப்பி அளிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 4 என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த சூழலில், கால அவகாசம் டிசம்பர் 11-ந்தேதி வரை ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது. பின்னர் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டு டிசம்பர் 14 இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது. இதன்பின்னர், டிசம்பர் 19-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது.
இதன்படி, நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. எனினும், இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்கள், தங்களுடைய பெயரை சேர்க்க சிறப்பு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் சேர்க்கை, திருத்தம் மற்றும் மறுப்பு தொடர்பான பணிகளை ஜனவரி மாதம் 18-ந்தேதி வரை மேற்கொள்ளலாம். பெயர் இல்லாதவர்கள், படிவம் 6-ஐ பூர்த்தி செய்து, இனி அதற்கான உறுதிமொழி படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த உறுதிமொழி படிவம் என்பது, சிறப்பு தீவிர பணிக்காக கொடுக்கப்பட்ட கணக்கெடுப்பு படிவம் போன்று தான் இருக்கும். அதில் கடந்த 2002 மற்றும் 2005-ம் பட்டியலில் இடம் பெற்ற தங்களது பெயர் அல்லது பெற்றோர்கள் விவரங்களை பூர்த்தி செய்துதர வேண்டும். அந்த தகவல்கள் சரியாக இல்லாத பட்சத்தில் அதற்கான ஆவணங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். அதில் ஆதார் ஏற்றுக்கொள்ளப்படாது.
மக்களின் அச்சம் என்ன?
பெரும்பாலானோர் பூர்த்தி செய்து கொடுத்த படிவத்தில், முந்தைய வாக்காளர் விவரங்களை அளிக்க முடியவில்லை. காரணம், செல்போனில் தேர்தல் ஆணையத்தின் செயலி வைத்திருந்தாலும், ஒருவர் முன்பு இருந்த ஊர் அல்லது பகுதி முன்பு எந்தத் தொகுதியில் இருந்தது என்பதையே உறுதி செய்ய முடியாத நிலையில், பாமர மக்கள், அதுபோன்ற வாய்ப்புகள் கிடைக்காதவர்கள் எவ்வாறு அந்த விவரங்களை பூர்த்தி செய்து கொடுத்திருக்க முடியும்.
எனவே, வரைவு வாக்காளர் பட்டியலை அனைவருமே சரிபார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
தற்போதைய நிலை என்ன?
தொடர்பு கொள்ள முடியாத வாக்காளா்கள், இறந்தவா்கள், கண்டறிய இயலாத/ முகவரியில் இல்லாத வாக்காளா்கள், இடம் பெயா்ந்தவா்கள், இரட்டை பதிவு செய்த வாக்காளா்கள் என குறிக்கப்பட்ட வாக்காளா்களின் வாக்குச்சாவடி வாரியான பட்டியல் தயாரிக்கப்பட்டு அது பிஎஎல்ஓ ஆப் (BLO App) என்ற செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் உள்ளவர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது என்றே கூறப்படுகிறது.
இதனுடன், தவறுதலாக, படிவத்தில் பிழையாக எழுதிக் கொடுத்ததால், வரைவு வாக்காளர் பட்டியலில், ஒருவரது பெயர் விடுபட்டிருந்தால் என்ன செய்வது என்பதால் அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.
ஏன் பெயர் விடுபட்டது என்பதை அறிய முடியுமா?
அதிகாரிகள் கூறுகையில், வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னா், கண்டறிய இயலாத/ முகவரியில் இல்லாத வாக்காளா்கள், இடம் பெயா்ந்தவா்கள், இறந்தவா்கள், இரட்டை பதிவு செய்த வாக்காளா்களில் பட்டியலில் இடம்பெற்றவா்கள் உள்ளிட்டோரின் விவரங்களை அறிந்துகொள்ளும் வசதி, அந்தந்த மாவட்ட தோ்தல் அதிகாரிகளின் இணையதளங்களில் வழங்கப்படும். பொதுமக்கள் தங்களது விவரங்களை தேவைப்படின் இப்பட்டியலில் சரிபாா்த்துக் கொள்ளலாம் என விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே, ஒருவரது பெயர் ஏன் நீக்கப்பட்டது என்பதற்கான காரணத்தை இந்த இணையதளம் வாயிலாக அறியலாம்.
இதில் ஏதேனும் ஆட்சேபனைகளோ, பெயர்கள் விடுபட்டிருந்தாலோ, டிசம்பர் 19 முதல் 2026ஆம் ஆண்டு ஜன. 18ஆம் தேதி வரை உரிமை கோரல்கள், மறுப்புரைகள் வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிறகு, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டோர் புதிதாக சேர்க்க வேண்டிய வாக்காளர் படிவம் 6 மூலம் விவரங்களைப் பதிவு செய்து வழங்க வேண்டும். அந்த படிவம் குறித்து அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி, தகுதியுடைய வாக்காளர்கள் பட்டியலில் மீண்டும் சேர்க்கப்படுவார்கள்.
பிப்ரவரி மாதம் வெளியாகும் இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படும் என்று விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த படிவம் 6ஐ வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களில் நேரடியாக பெறலாம். மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் ECINET செயலி அல்லது voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, கீழ்க்கண்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பிக்கலாம். அதன் விவரம் விவரம் வருமாறு:-
1. மத்திய-மாநில அரசு-பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் நிரந்தர ஊழியர் அல்லது ஓய்வூதியதாரருக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை அல்லது ஓய்வூதிய ஆணை.
2. 01.07.1987-க்கு முன்பு அரசு, உள்ளாட்சி அமைப்புகள், வங்கிகள், அஞ்சல் அலுவலகம், எல்.ஐ.சி., பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டை, சான்றிதழ் அல்லது பிற ஆவணங்கள்.
3. தகுதியான அதிகாரி வழங்கிய பிறப்பு சான்றிதழ்.
4. பாஸ்போர்ட்.
5. அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் வழங்கிய மெட்ரிகுலேஷன்-கல்வி சான்றிதழ்.
6. தகுதியான மாநில அதிகாரி வழங்கிய நிரந்தர வசிப்பிட சான்றிதழ்.
7. வன உரிமை சான்றிதழ்.
8. தகுதியான அதிகாரி வழங்கிய சாதி சான்றிதழ்கள்.
9. தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையில் உள்ள பகுதிகளில்.
10. மாநில அல்லது உள்ளாட்சி அதிகாரிகள் தயாரித்த குடும்ப பதிவேடு.
11. அரசு வழங்கிய நிலம் அல்லது வீடு ஒதுக்கீட்டு சான்றிதழ்.
12. ஆதார் அட்டை இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களுக்கு உட்பட்டு.
உள்ளிட்ட உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் மட்டுமே பெயர் சேர்க்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் முகவரி மாற்றவும், தற்போது பட்டியலில் உள்ள விவரங்களை திருத்தவும் படிவம்-8 கொடுக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

No comments:
Post a Comment