அடக்குமுறைகளை கைவிட்டு இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும்.- _அகில இந்திய ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்_*:-
*மத்திய அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படும் வழங்கப்படும் என திமுக தலைவர் கலைஞர் தலைமையிலான அன்றைய தமிழக அரசு உறுதியளித்திருந்தது. இந்த உறுதிமொழிக்கு மாறாக ஆறாவது ஊதிய குழுவில் வழங்கப்பட்ட ஆசிரியர்களது ஊதிய விகிதத்தில் தமிழக அரசு மாற்றம் செய்தது. இதனால் இடைநிலை ஆசிரியர்களிடம் ஊதியம் குறைக்கப்பட்டது. இது ஏழாவது ஊதிய குழுவிலும் தொடர்ந்தது. ஒரே நிலையில் உள்ள ஆசிரியர்கள் இரண்டு விதமான ஏற்ற இலக்கங்களுடன் கூடிய ஊதியங்களை பெறக்கூடிய வினோத நிலைக்கு தள்ளப்பட்டனர். இவைகளின் காரணமாக இடைநிலை ஆசிரியர்கள் மிகப்பெரிய அளவிலான ஊதிய பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.*
*இந்நிலையில் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக தனது வாக்குறுதி 311 இல் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக அரசு 57 மாதங்களாக இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி தரவில்லை. இடைநிலை ஆசிரியர்கள் என்றில்லாமல் முதுகலை, பட்டதாரி, அனைத்து வகை தலைமையாசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்களின் கோரிக்கைகளையும் தமிழக அரசு கிடப்பில் போட்டுள்ளது. இதற்காக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தற்போது இரண்டு நாட்களாக இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றிணைந்து சென்னையில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.*
*இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றி தருகிறேன் என்று வாக்குறுதி அளித்து, ஆட்சிக்கு வந்து 57 மாதம் ஆன பின்னரும், நிறைவேற்றவில்லையே என்று போராட்டக் களத்திற்கு வந்த இடைநிலை ஆசிரியர்களை கைது செய்வது, பாதி வழியிலேயே தடுத்து நிறுத்துவது, அச்சுறுத்துகின்ற வகையில் காவல் படையை வைத்து ஆசிரியர்களை குறிப்பாக பெண் ஆசிரியர்கள் என்றும் பாராமல் தூக்கி வீசுவது வேதனைக்குரிய செயலாகும். அரசால் ஏற்றுக்கொண்ட நியாயமான கோரிக்கைக்காக போராடுபவர்களை அழைத்து பேசி தீர்வு காண்பது தான் ஆரோக்கியமான நிலைபாடாக இருக்கும். ஆனால் அடக்குமுறைகளால் போராட்டத்தை நசுக்கி விடலாம் என தமிழக அரசு நினைக்கிறது. அது கூடுதலான எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.*
*இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையில் உள்ள நியாயத்தை அனைத்து ஆசிரியர் சங்கங்களும் ஏற்றுக் கொண்டுள்ளன. அப்படி இருக்கும் நிலையில் அந்தக் கோரிக்கைகளுக்காக போராட்டம் நடத்துபவர்களை அடக்குமுறைகளால் ஒடுக்கி விடலாம் என நினைப்பதை வேடிக்கை பார்க்க முடியாது. இதனை உணர்ந்தாவது தமிழக அரசு அனைத்து ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கையாக உள்ள இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை சரி செய்து தர வேண்டும். அடக்குமுறைகளால் எதிர்கொள்வதை விட்டுவிட்டு ஆக்கபூர்வமான வழிகளில் தமிழக அரசு சிந்தித்து கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும். அதற்கான ஆலோசனைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.*
அன்புடன்...
*ந.ரெங்கராஜன்*,
இணைப் பொதுச்செயலாளர்,
அகில இந்திய ஆசிரியர் கூட்டணி.


No comments:
Post a Comment