முட்டைகளில் புற்றுநோயை உண்டாக்கும் ’நைட்ரோஃபுரான்’ என்ற வேதிப்பொருள் இருப்பதாக சமூக வலைதளங்களில் அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
முட்டைகளில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிப்பொருள் கலந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், நாடு முழுவதும் முட்டைகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்வு நடத்த மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அனைத்து தரப்பினரும் விரும்பி சாப்பிடும் உணவாக கோழி முட்டை இருந்து வருகிறது. குறைந்த விலையில் கிடைக்கும் முட்டையில் அதிக அளவு புரோட்டின் சத்து இருப்பதால் பெற்றோரும் தங்களது குழந்தைகளுக்கு தினமும் முட்டை கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ’எகோஸ்’ என்ற நிறுவனத்தின் சார்பில் விற்பனை செய்யப்படும் முட்டைகளில் புற்றுநோயை உண்டாக்கும் ’நைட்ரோஃபுரான்’ என்ற வேதிப்பொருள் இருப்பதாக சமூக வலைதளங்களில் அதிர்ச்சித் தகவல் வெளியானது.
இதைத்தொடர்ந்து பெங்களூரு உட்பட மாநிலம் முழுவதும் முட்டை மாதிரிகளை சேகரித்து ஆய்வு நடத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் பிராண்டட் மற்றும் பிராண்டட் இல்லாத முட்டைகளின் மாதிரிகளை சேகரித்து 10 ஆய்வகங்களுக்கு அனுப்பி வைக்கும்படி மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
’நைட்ரோஃபுரான்’ என்பது கோழி, பன்றி, இறால் போன்ற பண்ணையில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு தொற்று பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்படும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்து ஆகும். இந்த நைட்ரோஃபுரான் மருந்து மனிதர்களில் புற்றுநோயை உண்டாக்கக்கூடியது. இதனால், உணவுக்கு பயன்படும் கால்நடை வளர்ப்பில் நைட்ரோஃபுரான் மருந்து பயன்படுத்துவதற்கு இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தடை விதித்துள்ளன.
இந்நிலையில், பெங்களூருவில் விற்பனை செய்யப்பட்ட குறிப்பிட்ட நிறுவனத்தின் முட்டையை இட்ட கோழிகளை வளர்ப்பதற்கு தடைசெய்யப்பட்ட நைட்ரோஃபுரான் மருந்து பயன்படுத்திருக்க அதிக வாய்ப்பிருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. அதைத்தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள முட்டைகளை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
முட்டைகளில் சிறிய அளவில் நைட்ரோஃபுரான் என்ற வேதிப்பொருள் கலந்திருப்பதால் எந்த பாதிப்பும் இருக்காது என்றும், பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் குடலியல் சிறப்பு மருத்துவர் பாண்டுரங்கன் நியூஸ் 18 தமிழ்நாடு-வில் தெரிவிக்கிறார். இதனை ஒரு எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்தப்படுவதை அரசு தடுக்க வேண்டும் என மருத்துவர் வலியுறுத்தினார்.

No comments:
Post a Comment