JACTTO GEO சங்கங்களுடன் அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி - ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் - Asiriyar.Net

Tuesday, December 23, 2025

JACTTO GEO சங்கங்களுடன் அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி - ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்

 




பழைய ஓய்வூதியம் திட்டம் உட்பட முக்கிய கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதையடுத்து, ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என அரசு ஊழியர் - ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன.



அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம், அரசு துறைகளில் காலியாக உள்ள லட்சக்கணக்கான பணியிடங்களை நிரப்புவது, 7-வது ஊதியக்குழு நிலுவைத்தொகை வழங்குவது, ஊதிய முரண்பாட்டை களைவது என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்-ஆசிரியர் சங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் போராடி வருகின்றனர்.



தொடர்ந்து ஆர்ப்பாட்டம், அடையாள உண்ணாவிரதம், கோரிக்கை முழக்கம் என பல்வேறு வடிவங்களில் போராட்டங்கள் நடத்தி வந்த நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவித்தது.



இந்நிலையில், தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்தபடி, தலைமைச் செயலகத்தில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் ஜாக்டோ-ஜியோ, போட்டோ ஜியோ உள்ளிட்ட அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.



அரசு சார்பில் பங்கேற்ற அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் ஆகியோர் ஒவ்வொரு சங்கத்தின் நிர்வாகிகளின் கருத்துகளையும், கோரிக்கைகளையும் கேட்டனர். காலை 11.15 மணி அளவில் தொடங்கிய பேச்சுவார்த்தை மதியம் 2 மணிக்கு மேல் நீடித்தது. ஆனால், இதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை.


இதுகுறித்து அனைத்து அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ‘போட்டோ ஜியோ’ மாநில ஒருங்கிணைப்பாளர் த.அமிர்தகுமார் கூறியதாவது:



கோரிக்கைகள் தொடர்பாக அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். ஆனால், நிதி பிரச்சினை என ஏற்கெனவே சொல்லி வந்ததையே மீண்டும் சொல்கின்றனர். எனவே, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. வரும் 29-ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். ஜனவரி 6-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.



ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நேற்று மாலை 5 மணிக்கு நடந்தது. இதன்பிறகு, ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மு.பாஸ்கரன் கூறும்போது, ‘‘அமைச்சர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. எனவே, நாங்கள் ஏற்கெனவே அறிவித்தபடி ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும். டிசம்பர் 27-ல் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆயத்த மாநாடு நடத்தப்படும்’’ என்றார்.


No comments:

Post a Comment

Post Top Ad