தமிழக அரசுக்கு நெருக்கடி - வரிசையாகப் போராட்டங்களை அறிவித்த ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் - Asiriyar.Net

Thursday, December 4, 2025

தமிழக அரசுக்கு நெருக்கடி - வரிசையாகப் போராட்டங்களை அறிவித்த ஊழியர், ஆசிரியர் சங்கங்கள்

 



பழைய பென்ஷன் திட்டத்தை (OPS) அமல்படுத்தக் கோரி அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் கடந்த 22 ஆண்டுகளாகத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தது. ஆனால், இதுவரை அதை நிறைவேற்றவில்லை.


குழுவின் நிலை என்ன?

புதிய பென்ஷன் திட்டம் (CPS), பழைய பென்ஷன் திட்டம் மற்றும் புதிதாகக் கொண்டு வந்துள்ள ஒருங்கிணைந்த பென்ஷன் திட்டம் ஆகியவற்றில் எது சிறந்தது என்பதை ஆய்வு செய்ய, ஐ.ஏ.எஸ். அதிகாரி ககன்தீப் சிங் பேடி தலைமையில் ஒரு குழுவை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த பிப்ரவரியில் அமைத்தார். அந்தக் குழு என்ன செய்தது, என்ன செய்கிறது என்று தெரியாமல் அரசு ஊழியர்கள் விரக்தியில் உள்ளனர்.


கொந்தளிப்பில் ஊழியர்கள்

தமிழக அரசு, இந்த குழுவை அமைத்த பின்னரும், புதிய பென்ஷன் திட்டத்துக்கு எதிரான வழக்கில், புதிய பென்ஷன் திட்டம் சிறப்பாகச் செயல்படுகிறது என்று சென்னை உயர் நீதிமன்றக் கிளையில் கடந்த மாதம் சான்றிதழ் வழங்கியுள்ளது. இது அரசு ஊழியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கி விட்டதால், இப்போது விட்டால் எப்போதும் கிடைக்காது என்ற எண்ணத்தில் பல்வேறு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் போராட்டங்களை அறிவித்துள்ளன.


போராட்டங்களின் விவரம்:

இன்று (டிச. 4): பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.


இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தினர்: சம வேலைக்கு சம சம்பளம் வழங்குவதாக அறிவித்த தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, கடந்த டிசம்பர் 1 முதல் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றி வருகின்றனர்.


நாளை (டிச. 5) கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் பேரணி நடத்துகின்றனர்.


தொடர்ந்து டிசம்பர் 24 அன்று சம்பள மீட்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.


ஜாக்டோ ஜியோ: அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில்:


வரும் டிசம்பர் 13 அன்று மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


வரும் டிசம்பர் 27 அன்று மாவட்ட தலைநகரங்களில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடைபெறும்.


ஜனவரி 6 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளது.


டிட்டோ ஜாக்: தமிழ்நாடு ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான டிட்டோ ஜாக் சார்பில் வரும் டிசம்பர் 8 முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளது.


சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம்: வரும் டிசம்பர் 11 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.


ஜனவரி 22 முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.


தலைமைச் செயலாளருடன் சந்திப்பு

ஒவ்வொரு சங்கமும் தனித்தனியாகப் போராட்ட அறிவிப்பை வெளியிட்டு அரசுக்கு அழுத்தம் கொடுத்துள்ள நிலையில், ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் பாஸ்கரன், வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் முருகானந்தத்தை சந்தித்துப் பேசினர். கோரிக்கைகள் மற்றும் அறிவிக்கப்பட்ட போராட்டங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.


வரும் ஜனவரி 6-ம் தேதிக்குள் பழைய பென்ஷன் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என்றும் அப்போது கோரிக்கை வைத்தனர். நல்ல முடிவு எடுத்து அறிவிப்பதாக முருகானந்தம் உறுதியளித்ததாக நிர்வாகிகள் கூறினர். மேலும், மனிதவள மேலாண்மைத் துறை செயலர் சமயமூர்த்தியையும் சந்தித்து இது தொடர்பாக வலியுறுத்தியுள்ளனர்.


No comments:

Post a Comment

Post Top Ad