மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் விவரங்கள் ஏற்கனவே ‘எமிஸ்’ (EMIS) இணையதளத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது, அந்தத் தளத்தில் ஒவ்வொரு மாணவரின் பெயருக்கும் நேராக, அவர் சத்துணவு சாப்பிடுகிறாரா இல்லையா என்ற விவரத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தலைமை ஆசிரியர்களின் கடமை: பள்ளியின் தலைமை ஆசிரியர், தனது பள்ளியின் எமிஸ் லாகின் (Login) ஐடி-யைப் பயன்படுத்தி, மாணவர் பட்டியலில் ‘Noon Meal Scheme’ என்ற பிரிவில் விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும்.
யார் சாப்பிடுகிறார்கள்? சில மாணவர்கள் பள்ளியில் பெயர் கொடுத்திருப்பார்கள், ஆனால் வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு வருவார்கள். இனி அது நடக்காது. உண்மையில் யார் பள்ளியில் மதிய உணவு சாப்பிடுகிறார்களோ, அவர்களுக்கு மட்டுமே ‘Yes’ என்று குறிப்பிட வேண்டும். சாப்பிடாதவர்களுக்கு ‘No’ என்று குறிப்பிட வேண்டும்.
ஏன் இந்தத் திடீர் கணக்கெடுப்பு?
சத்துணவு மையங்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு மற்றும் முட்டை ஆகியவை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வழங்கப்படுகின்றன. ஆனால், வருகைப் பதிவேட்டில் உள்ள எண்ணிக்கைக்கும், உண்மையில் சாப்பிடும் மாணவர்களின் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
“மாணவர் எண்ணிக்கையைக் கூடுதலாகக் காட்டிப் பொருட்களில் முறைகேடு நடப்பதைத் தடுக்கவே இந்த டிஜிட்டல் கணக்கெடுப்பு” என்கிறார்கள் கோட்டை வட்டார அதிகாரிகள். இந்தத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டே இனி வரும் காலங்களில் பள்ளிகளுக்கான சத்துணவு நிதி மற்றும் பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.
கெடு விதிப்பு:
இந்த விவரங்களை உடனடியாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும், இதில் ஏதேனும் தவறு நடந்தால் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியரே பொறுப்பு என்றும் பள்ளிக்கல்வித் துறை கறாராகத் தெரிவித்துள்ளது. இதனால், ஆசிரியர்கள் மீண்டும் மொபைலும் கையுமாக டேட்டா ஏற்றும் பணியில் மும்முரமாகியுள்ளனர். விவரங்களைப் பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள் (SOP) அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் (CEO) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment