தாயின் மரணத்துக்கு பின் விவாகரத்து - மகளுக்கு குடும்ப ஓய்வூதியம் மறுப்பு - Asiriyar.Net

Sunday, June 2, 2024

தாயின் மரணத்துக்கு பின் விவாகரத்து - மகளுக்கு குடும்ப ஓய்வூதியம் மறுப்பு

 




தாயின் மரணத்துக்கு முன் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றிருந்தால் மட்டுமே, குடும்ப ஓய்வூதியம் பெற முடியும்' என, உத்தரவிட்ட மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் சென்னை அமர்வு, பஞ்சாயத்தார் முன்னிலையில் விவாகரத்து பெற்ற மகள், குடும்ப ஓய்வூதியம் கேட்டு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது.


தெற்கு ரயில்வேயில் பணிபுரிந்தவர் குப்பம்மாள். அவரது கணவரும், ரயில்வேயில் பணியாற்றினார். கடந்த 1977ல் பணிக்காலத்தில் கணவர் மரணம் அடைந்ததால், கருணை அடிப்படையில், தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில், குப்பம்மாளுக்கு துாய்மை பணியாளராக வேலை கிடைத்தது.


அவரின் மகள் சரஸ்வதி, தன் கணவரை பிரிந்து, 1998 முதல் தன் தாய் குப்பம்மாளுடன் வசித்து வந்தார்.


பின், 2001ல் குப்பம்மாள் மரணமடைந்தார். இதையடுத்து, விவாகரத்தான தனக்கு கருணை அடிப்படையில் பணியும், குடும்ப ஓய்வூதியமும் வழங்க கோரி, ரயில்வே நிர்வாகத்துக்கு சரஸ்வதி பலமுறை மனு அனுப்பினார். ஆனால், அந்த மனு ரயில்வே நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டது.


இதையடுத்து, சென்னையில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் அமர்வில், சரஸ்வதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் எம்.சுவாமிநாதன் முன் விசாரணைக்கு வந்தது.


அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'கணவரிடம் விவாகரத்து பெற்ற மனுதாரர், அவரின் தாயை கடைசி வரை பராமரித்துள்ளார். தாய் இறப்பதற்கு முன் பஞ்சாயத்தார் முன்னிலையில், 1998ல் அவரது விவாகரத்து ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது' என்றார்.


ரயில்வே நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'தாய் மரணமடைந்த பின், மனுதாரர் சரஸ்வதி திருச்சி சார்பு நீதிமன்றத்தில், 2010ல் விவாகரத்து பெற்றுள்ளார்.


'அதற்கு முன், 1998ல் பஞ்சாயத்தார் முன்னிலையில் செய்த விவாகரத்து ஒப்பந்தம் சட்ட ரீதியானதல்ல. இந்த வழக்கை பொறுத்தமட்டில், விவாகரத்து பெற்ற மகளுக்கு குடும்ப ஓய்வூதியம் தரும் விதி, மனுதாரருக்கு பொருந்தாது' என்றார்.


இரு தரப்பு வாதங்களை கேட்ட தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர், 'குப்பம்மாள் 2001ல் மரணமடைந்துள்ளார்.


'மனுதாரர் 2010ல் தான் விவாகரத்து பெற்றுள்ளார். பஞ்சாயத்து தீர்ப்பு சட்ட ரீதியான விவாகரத்து ஆகாது. எனவே, குடும்ப ஓய்வூதியம் வழங்க கோரிய அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று தீர்ப்பளித்தார்.


No comments:

Post a Comment

Post Top Ad