தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு பெற்ற ஆசிரியர் ஐயப்பன், பழங்குடியின மாணவர்களுக்கு சிகை அலங்காரம் செய்வதோடு, துணி துவைத்து கொடுத்து அசத்தி வருகிறார்.திருப்பூர் மாவட்டம் உடுமலை ஒன்றியம் லிங்கமாவூர் கிராமத்தில், அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி உள்ளது. இங்கு ஆசிரியராக பணியாற்றும் ஐயப்பன் (36) என்பவருக்கு, தமிழக அரசு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது அறிவித்துள்ளது.
பழங்குடியின மாணவர்கள் படிக்கும் இப்பள்ளியில் செய்து வரும் சேவைகள் குறித்து ஆசிரியர் ஐயப்பன் கூறியதாவது:
கோவை ஸ்ரீராமகிருஷ்ணா ஆதரவற்றோர் மாணவர் இல்லத்தில் தான் நான் படித்து வளர்ந்தேன். தெய்வபக்தி, தேசபக்தி, ஒழுக்கம், பண்பாடு ஆகியவற்றை அங்குதான் கற்றேன். நான் பணியாற்றுவது மலைவாழ் மாணவர்கள் தங்கி படிக்கும் உண்டு உறைவிடப்பள்ளியாகும். நான் இங்கு வரும்போது மாணவர்கள் தன்சுத்தம் இன்றி இருந்தனர். கல்வி போதிக்கும் அறையும், உண்டு உறங்கும் அறையும் ஒரே அறையாகவே இருந்தது.
காலை 9 மணிக்கு வரும்போது வகுப்பறை சுத்தமின்றி கிடக்கும். மாணவர்களும் தலைவாராமல் குளிக்காமல் இருந்தனர். அவர்களுக்கு தன் சுத்தம் குறித்து கற்பித்தேன். புரிந்து கொள்ள இயலாத குழந்தைகளுக்கு நானே துணிகளை துவைத்து, முடி திருத்தம் செய்து வந்தேன். இது மாணவர்கள், பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. எனது செயல்பாட்டை பார்த்த மாவட்ட நிர்வாகம் என்னை மாவட்ட நலக்குழு உறுப்பினராக நியமித்துள்ளது.
காலாண்டுக்கு ஒருமுறை நடைபெறும் கூட்டத்தில் பள்ளியின் தேவைகள் குறித்து ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு பெற்று தந்துள்ளேன்.அதன்படி, ஒரே அறையில் மாணவர்கள் தங்கி, பயிலும் நிலையை முறையிட்டு, நான்கு வகுப்பறை கொண்ட பள்ளி கட்டிடத்தை பெற்றுத்தந்து, மாணவர்கள் நல்ல முறையில் கல்வி கற்க ஏற்பாடு செய்துள்ளேன். பள்ளிக்கு தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பள்ளிக்கு அருகே மயானம் இருப்பதால் தற்போது சுற்றுச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. எதிர்கால இந்தியாவின் தூண்களாக மாணவச் செல்வங்களை உருவாக்குவதே எனது லட்சியமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment