திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சேவூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 783 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிளஸ் 1 மாணவர் ஒருவர், நண்பர்களுடன் சிகரெட் பிடித்து மாணவிகள் முகத்தில் புகை விட்டு கேலி செய்தாராம். இதுகுறித்த மாணவி கொடுத்த புகாரில், சம்பந்தப்பட்ட மாணவரை பள்ளி ஆசிரியர்கள் வெங்கட்ராமன், திலீப்குமார், நித்யானந்தம், பாண்டியன் ஆகியோர் கண்டித்துள்ளனர். அப்போது மாணவரை ஆசிரியர்கள் அடித்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில் டிஎஸ்பி ரவிச்சந்திரன், சிஇஓ கணேஷ்குமார் மற்றும் போலீசார், கல்வி அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தினர். பின்னர் ஆசிரியர்கள் வெங்கட்ராமன், திலீப்குமாரை சஸ்பெண்ட் செய்தும், முதுகலை ஆசிரியர்கள் நித்தியானந்தத்தை கேளூர் அரசுப்பள்ளிக்கும், பாண்டியனை முள்ளண்டிரம் அரசுப்பள்ளிக்கும் பணியிடம் மாற்றம் செய்து சிஇஓ உத்தரவிட்டார்.
இன்று காலை சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர், சஸ்பெண்ட் மற்றும் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீது தவறு இல்லை. அவர்களை திரும்ப பள்ளியில் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் எனக்கூறி பள்ளியை முற்றுகையிட்டு வாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த டிஎஸ்பி ரவிச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ்குமார், தாசில்தார் ஜெகதீசன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் அங்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, 4 ஆசிரியர்கள் மீதும் தவறு இல்லை. எனவே சஸ்பெண்ட் செய்தவர்களையும், பணியிடமாற்றம் செய்தவர்களையும் திரும்ப பெறவேண்டும். ஆசிரியர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் எனக்கூறி கோஷமிட்டனர். பின்னர் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆரணி-வேலூர் சாலை சேவூர் பஸ்நிறுத்தம் அருகே சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கண்டுகொள்ளாத எம்எல்ஏ:
அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போதைய எம்எல்ஏவுமான சேவூர் ராமச்சந்திரனின் சொந்த ஊர் ஆரணி அடுத்த சேவூர் ஆகும். சேவூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் பிரச்னை குறித்து பொதுமக்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர் அதனை கண்டு கொள்ளவில்லையாம். இதனால் அவர் மீது தொகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.
No comments:
Post a Comment