முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் வன்னியர் உள் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை என டிஆர்பி தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் மனு முடித்து வைக்கப்பட்டது. சீர் மரபினர் நலச்சங்க தலைவர் ஜெபமணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் மற்றும் கணினி பயிற்றுநர் நியமனம் தொடர்பான அறிவிப்பு கடந்தாண்டு ஆசிரியர் தேர்வாணையத்தால் வெளியானது.
சான்றிதழ் சரிபார்ப்புக்கான தகுதியானோர் பட்டியல் கடந்த ஆக. 28ல் வெளியானது. இதில், எம்பிசி, எம்பிசி (வன்னியர்) மற்றும் எம்பிசி - சீர்மரபினர் என தனித்தனியாக மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது சட்டவிரோதம். ஏற்கனவே எம்பிசி பட்டியலில் இருந்து வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதை கருத்தில் கொள்ளாமல் தேர்வானோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல் பாடவாரியான கட்-ஆப் முறை கணக்கிடப்படவில்லை. எனவே, முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான பட்டியலை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இதேபோல் மேலும் பலர் மனு செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் வக்கீல் சண்முகநாதன் ஆஜராகி, ‘‘சம்பந்தப்பட்ட நியமனங்களில் வன்னியர் உள்இடஒதுக்கீட்டின்படி 10.5 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீடு தான் பொதுவான முறையில் பின்பற்றப்படுகிறது. இதில், எந்த விதிமீறலும் இல்லை’’ என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுக்களை முடித்து வைத்தார்.
No comments:
Post a Comment