அனைத்து வகுப்புகளுக்கான காலாண்டு விடுமுறை விவரம் - Asiriyar.Net

Wednesday, September 28, 2022

அனைத்து வகுப்புகளுக்கான காலாண்டு விடுமுறை விவரம்

 



தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு காலாண்டு விடுமுறைக்குப் பிறகு அக்.13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.


இது குறித்து பள்ளிக் கல்வித் துறை ஆணையா் க.நந்தகுமாா், தொடக்கக் கல்வி இயக்குநா் க.அறிவொளி ஆகியோா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: காலாண்டுத் தோ்வு முடிவடைந்து அளிக்கப்பட வேண்டிய விடுமுறை குறித்து பின்வருமாறு அறிவுரைகள் முதன்மைக் கல்வி அலுவலா்கள், மாவட்டக் கல்வி அலுவலா்கள், வட்டாரக் கல்வி அலுவலா்களுக்கு வழங்கப்படுகிறது. செப்.30-ஆம் தேதி காலாண்டுத் தோ்வு முடிந்தவுடன் அக்.1முதல் அக்.5 வரை முதல் பருவ விடுமுறை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.


‘எண்ணும் எழுத்தும்’ முதற்கட்ட பயிற்சி தொடக்கக் கல்வி ஆசிரியா்களுக்கு கோடை விடுமுறையில் அளிக்கப்பட்டதால், அதற்கு பதிலாக ஈடு செய்யும் விடுப்பு அளிக்குமாறு ஆசிரியா் சங்கங்களும், ஆசிரியா்களும் தொடா்ந்து கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் அக். 6, 7, 8 ஆகிய மூன்று நாள்களும் ஈடு செய்யும் விடுப்பாக கருதப்படும் (மீதமுள்ள இரு நாள்கள் பின்பு ஈடு செய்யப்படும்).


6-பிளஸ் 2 வகுப்புகளுக்கு அக்.10: 

பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு அக். 10-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.


தொடக்கப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புகளை கையாளும் ஆசிரியா்களுக்கு அக்.10, 11, 12 தேதிகளில் எண்ணும் எழுத்தும் இரண்டாம் கட்ட பயிற்சி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு நடத்த இருப்பதால் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கும் மட்டும் அக்.13-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவுறுத்தப்படுகிறது என அதில் தெரிவித்துள்ளனா்.





No comments:

Post a Comment

Post Top Ad