மாணவர் சீருடையிலேயே சென்று தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழக ஆசிரியர் - யார் இந்த ராமச்சந்திரன்? - முழு விவரம் - Asiriyar.Net

Monday, September 5, 2022

மாணவர் சீருடையிலேயே சென்று தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற தமிழக ஆசிரியர் - யார் இந்த ராமச்சந்திரன்? - முழு விவரம்

 அரசுப்பள்ளி சீருடையிலேயே சென்று தேசிய நல்லாசிரியர் விருது பெற்றார் தமிழக ஆசிரியர் ராமச்சந்திரன்.

டெல்லியில் தேசிய நல்லாசிரியர் விருதை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ராமச்சந்திரனுக்கு வழங்கினார். அரசுப்பள்ளி சீருடையிலேயே சென்று அவர் விருது பெற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


யார் இந்த ராமச்சந்திரன்?


ராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஒன்றியத்தில், கீழாம்பல் கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் கே.ராமச்சந்திரன்.
கோவிட் கால உதவி

கொரோனா காலத்தில் அரசுப் பள்ளியில் படிக்கும் விளிம்புநிலைக் குழந்தைகளின் கல்வி தடைப்பட்டது. அவர்களுக்கு இணைய வழியில் கற்பிக்க முடிவெடுத்து, செல்போன்களைத் தனது சொந்த செலவில் வாங்கிக் கொடுத்தவர் ஆசிரியர் ராமச்சந்திரன்.


கிராமத்தில் உள்ள பட்டதாரிகளுக்கு டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுக்குப் பயிற்சி வழங்கி வருகிறார். இதன்மூலம் கிராமத்து இளைஞர்களை அரசு ஊழியர்களாக்க முயற்சி மேற்கொண்டு வருகிறார். 


தொடக்கப் பள்ளிக்கு தனி யூடியூப் பக்கம்!


students skills என்ற பெயரில் யூடியூபில், கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு எனத் தனியாக கணக்கைத் தொடங்கி, மாணவர்களின் தனித்திறனை வெளிக்கொணர்ந்து வருகிறார். 


தமிழர்களின் தொன்மையும் பெருமையுமான திருக்குறளின் முக்கியத்துவத்தை மாணவர்களிடத்தில் விதைத்து வருகிறார். தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குத் திருக்குறளைக் கற்றுக் கொடுத்து, குறள்களை ஒப்புவிக்க வைக்கிறார். 


அதேபோல அரசின் திட்டங்களான எண்ணும் எழுத்தும் உள்ளிட்டவற்றையும் சிறப்புறக் கற்பித்து, யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். இவருக்கு இன்று டெல்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. 


Post Top Ad