வங்கி வட்டி விகிதம்
தற்போது நாட்டின் முன்னணி வங்கியான எஸ்பிஐ-யில் வட்டி விகிதம் 1 வருடம் முதல் 2 வருடங்களுக்குள்ளான டெபாசிட்டுக்கு வெறும் 5% தான் வட்டி விகிதம். இதே 5 வருட திட்டத்திற்கு 5.40% ஆகும், இதே காலகட்டத்தில் தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் 365 – 389 நாட்கள் டெபாசிட்டுக்கு 4.9% வட்டி விகிதமாகும். பொதுவாக தனியார் மற்றும் பொதுத் துறை வங்கிகளிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. ஆக இவற்றோடு ஒப்பிடும்போது அஞ்சலக திட்டங்கள் பரவாயில்லை எனலாம்.
போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட் அக்கவுண்ட்
போஸ்ட் ஆபீஸ் டைம் டெபாசிட்டுகள் வங்கி டெபாசிட்டினை விட பரவாயில்லை எனலாம். ஏனெனில் இந்த டைம் டெபாசிட் அக்கவுண்டிற்கு 6.7% வரை வட்டி கிடைக்கின்றது. இது மிக பாதுகாப்பான ஒரு முதலீடாகவும் சேமிப்பாகவும் பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 1, 2, 3, 5 வருடங்கள் வரை டைம் டெபாசிட் உண்டு. 5 வருட டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் போது பிரிவு 80சி கீழ் வரி விலக்கு உண்டு. இதில் குறைந்தபட்சம் டெபாசிட் 1000 ரூபாயாகும். அதிகபட்ச வரம்பு என்பது கிடையாது.
அஞ்சலக தொடர் வைப்பு நிதி
அஞ்சலத்தில் உள்ள தொடர்ச்சியான வைப்பு நிதி திட்டத்திற்கு, 5.8% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்யும்போது 12.41 வருடங்களில் உங்களது முதலீடு இருமடங்காகிறது. இது வங்கிகளுடன் ஒப்பிடும்போது அதிகமாகும்.
அஞ்சலக மாதாந்திர வருமான திட்டம்
அஞ்சலகத்தில் வழங்கப்படும் மாத வருமான திட்டத்தில், தற்போது வட்டி விகிதம், 6.6% வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திலும் காலாண்டுக்க ஒரு முறை வட்டி விகிதம் மாறுபடும். இதுவும் வங்கி திட்டங்களுடன் ஒப்பிடும்போது லாபம் அதிகம்.
அஞ்சலகத்தின் தேசிய சேமிப்பு பத்திரம்
என்எஸ்சி எனப்படும் தேசிய சேமிப்பு பத்திர திட்டம் (National Savings Certificate), ஒரு நிலையான வருமானத்தை தரக்கூடிய சிறு சேமிப்பு திட்டங்களில் ஒன்றாகும். குறைந்தபட்ச முதலீடாக 100 ரூபாயும், அதிகபட்ச முதலீட்டிற்கு வரம்பு ஏதும் இல்லை. தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் முதலீடு செய்யும் ஒருவர், அதற்கான வரி சலுகையையும் வருமான வரிச்சட்டம் 80சி பிரிவின் கீழ் சலுகை பெறலாம். இந்த திட்டத்திற்கு தற்போது 6.8% வட்டியாக வழங்கப்படுகிறது. ஆக வங்கியுடன் ஒப்பிடும்போது இது மிக அதிகமாகும்.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF)
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் நீண்டகால நோக்கங்களுக்காக, அதுவும் ஓய்வு காலத்திற்காக முதலீடு செய்ய நினைப்போருக்கு நிச்சயம், இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம் தான். ஏனெனில் முதலீட்டிற்கு பங்கம் இல்லாத ஒரு சிறந்த முதலீடு. இந்த திட்டமானது 15 ஆண்டுகால திட்டமாகும்.
இதில் திட்டத்தில் 80சியின் கீழ் வரிச் சலுகையும் உண்டு. இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் செலுத்திக் கொள்ளலாம், அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையில் செலுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் தற்போதைய வட்டி விகிதம் 7.1% ஆகும்.
அஞ்சலகத்தின் கிசான் விகாஸ் பத்திரம்
இந்திய தபால் துறையில் உள்ள சிறு சேமிப்பு திட்டங்களில், மிக முக்கியமான சேமிப்பு திட்டம் கிசான் விகாஸ் பத்திரம். இது சிறு முதலீட்டாளர்களுக்கு மிகவும் லாபகரமான மற்றும் பாதுகாப்பான ஒரு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சந்தை ஏற்ற இறக்கத்தினை பொருட்படுத்தாமல், கணிசமான லாபத்தினை கொடுக்கிறது. தற்போதைய நிலவரப்படி, இந்த திட்டத்திற்கு 6.9% வட்டி வழங்கபடுகிறது. ஆக இந்த திட்டமும் வங்கி டெபாசிட்டுகளை விட சிறந்தது எனலாம்.