தமிழக பள்ளிகள் ஆகஸ்டில் திறப்பு? கருத்து கேட்க அரசு திட்டம்! - Asiriyar.Net

Thursday, July 15, 2021

தமிழக பள்ளிகள் ஆகஸ்டில் திறப்பு? கருத்து கேட்க அரசு திட்டம்!

 





தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், ஆகஸ்டில் பள்ளிகளை திறப்பது குறித்து, வல்லுனர் குழு அமைத்து, பொதுமக்களின் கருத்து கேட்க, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.


நாடு முழுதும், கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் பாதிப்பு குறைவால் தொழில், வணிக நிறுவனங்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.


கோரிக்கை


பள்ளிகள், கல்லுாரிகள், திரையரங்குகள், கேளிக்கை நிகழ்ச்சி, பொது நிகழ்ச்சிகள் உட்பட சிலவற்றுக்கு மட்டும், இன்னும் கட்டுப்பாடுகள் நீடிக்கின்றன.இந்நிலையில், புதுச்சேரியில் வரும் 16ம் தேதி முதல் பள்ளிகள், கல்லுாரிகள் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்திலும், பள்ளி, கல்லுாரிகளை திறக்க வேண்டும் என, கல்வியாளர்களும், தனியார் பள்ளி சங்கங்களும் கோரிக்கை விடுத்துள்ளன.


இதுதொடர்பாக, 'பேப்சிட்' என்ற தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலர் இளங்கோவன் கூறியதாவது:ஆன்லைன் வகுப்புகளை மட்டுமே வைத்து, மாணவர்கள் முழுமையாக பாடங்களை படிக்க முடியாது. நேரடியாக ஆசிரியர்களின் கற்பித்தலை மாணவர்கள் பெற வேண்டும்.




வழிகாட்டுதல்



எனவே, அரசின் வழிகாட்டுதலை பின்பற்றி, பள்ளிகளை திறந்து நேரடி வகுப்பு நடத்த தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியதாவது: தமிழகத்தில், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு ஆகஸ்ட் முதல் பள்ளிகளை திறக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகளை திறக்கும் முன், அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி போட்டு கொள்ள ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மாணவர்களுக்கும் தொற்று பாதிக்காத வகையில், தமிழக அரசு உரிய வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாடுகளை விதித்து, அதை பள்ளிகள் பின்பற்ற உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


இந்நிலையில், தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து, பெற்றோர், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் உள்ளிட்டோரிடம் கருத்து கேட்க, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.மேலும், வல்லுனர் குழு அமைத்து, மருத்துவ, உளவியல் நிபுணர்கள் உள்ளிட்டோரின் கருத்துக்களுடன், அரசுக்கு அறிக்கை அளிக்கவும், பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை, அரசு விரைவில் வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.




கல்லுாரிகள் திறப்பு எப்போது?



தென் மாநிலத்திற்கான, ஆஸ்திரேலிய துாதரக அதிகாரி சாரா கிர்லுா, துணை துாதரக அதிகாரிகள் மைக்கேல் கோஸ்டா, ஆன்ட்ரு கோலிஸ்டர், முனீஸ் சர்மா மற்றும் அதிகாரிகள், நேற்று தலைமை செயலகம் சென்றனர். உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை சந்தித்து பேசினர். பொன்முடி கூறியதாவது:


தமிழகத்தில் உயர்கல்வி வளர, ஆஸ்திரேலியா துணை நிற்கும் என்ற நம்பிக்கை, இந்த சந்திப்பின் வழியே வந்துள்ளது. வெளிநாட்டு பல்கலைகளுடன், மாணவர்கள் பரிமாற்றம் தொடர்பாக, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும். தமிழகத்தில் கல்லுாரிகள் திறப்பு குறித்து, சுகாதாரத் துறையினருடன் ஆலோசித்த பின், முதல்வர் முடிவை அறிவிப்பார். ஏற்கனவே அறிவித்தபடி, கல்லுாரிகளில், ஆக., 1 முதல் மாணவர் சேர்க்கை நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad