திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் கிராமத்துக்கே சென்று அப்பள்ளி ஆசிரியைகள் பாடங்களை நடத்தினர்.
கரோனா ஊரடங்கால் 2021-2022-ம் கல்வி ஆண்டுக்கு இதுவரை பள்ளிகள் திறக்கப் படவில்லை. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகின்றன. கிராமப் புறங்களை சேர்ந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்த முடியாத சூழ்நிலை உள்ளது.
இந்நிலையில் மாணவர்கள் வசிக்கும் கிராமங்களுக்கே நேரடி யாகச் சென்று அவர்களுக்கு பாடங்களை கற்பிப்பது என்று மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் முடிவு செய்தனர்.
இதற்கு திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவகுமார், தலைமை ஆசிரியை அகஸ்டீனா, உதவி தலைமை ஆசிரியர் அழகுலிங்கம் ஆகியோரும் ஒப்புதல் அளித்தனர்.
இதையடுத்து இப்பள்ளியின் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியை இசபெல்லா செல்லகுமாரி, அறிவியல் பட்டதாரி ஆசிரியை பரமேஸ்வரி ஆகியோர் மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள மறவன்குளம் கிராமத்துக்கு சென்று தங்கள் பள்ளி மாணவர்களுக்கு பாடங்களை நடத்தினர். இதில் மாணவ, மாணவியர் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து பங்கேற்றனர்.
இது குறித்து ஆசிரியை இசபெல்லா செல்லகுமாரி கூறும்போது, ‘‘மாணவர்களின் நலன் கருதி மறவன்குளத்துக்கு சென்று பாடம் கற்பித்தோம். மாணவர்கள் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் பாடங்களை பார்த்து, குறித்து வைத்திருந்த பாட குறிப்புகளின் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதோம். மாணவர் களுக்கு தலா ஒரு மணிநேரம் ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடங்களை கற்பித்தோம் என்று தெரிவித்தார்.