இந்தியா முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை என தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டதால், பள்ளிகளை மீண்டும் திறப்பதற்கான சூழல் ஏற்படவில்லை. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களில் மாணவர்களின் இறுதி ஆண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
மேலும் ஊரடங்கு காலத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருப்பதற்காக, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் பள்ளிகள் மீண்டும் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்ப்பார்ப்பு பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே நிலவி வருகிறது. இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா அளித்த பேட்டியில் கூறியதாவது; கொரோனாவின் இரண்டாவது அலை குறைந்துள்ளது. நாடு முழுவதும் 40 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், ஆரம்பப் பள்ளிகளைத் திறக்க அரசுகள் பரிசீலிக்க வேண்டும்.