ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பொங்கல் பண்டிகைக்கு சிரமம் இல்லாமல் சொந்த ஊருக்குச் செல்லும் வகையில் போகிப் பண்டிகைக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்க மாநிலத் தலைவர் ஆ. ராமு, தமிழக முதல்வருக்கு அனுப்பிய கோரிக்கை மனு விவரம்:
தமிழக அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல ஆண்டுகளாக பொங்கல் பண்டிகையின் போது மிகை ஊதியம்(போனஸ்) மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஆண்டு மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு மறுக்கப்பட்டது.
நிகழாண்டில் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசின் கீழ் பணியாற்றும் அனைத்து நிலை அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்க வேண்டும்.
பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் ஆகியவை வரும் 15-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை தமிழகமெங்கும் கொண்டாடப்பட இருக்கிறது.
இந்தப் பாரம்பரிய பண்டிகைகளைக் கொண்டாட தமிழக அரசின் கீழ் பணிபுரியும் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆண்டுக்கு ஒருமுறை தாங்கள் பணிபுரியும் ஊரில் இருந்து சொந்த கிராமத்துக்குச் செல்வது வழக்கம்.
இந்தச் சூழ்நிலையில் 14-ஆம் தேதி போகிப் பண்டிகை அன்று அரசுப் பள்ளிகள், அலுவலகங்களுக்கு வேலை நாளாக உள்ளது. இதனால் அன்று பணி முடிந்து அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் இரவோடு இரவாக சொந்த கிராமத்துக்குச் செல்ல அதிக சிரமம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள் பணிபுரியும் ஊரில் இருந்து சொந்த கிராமத்திற்கு போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் சென்று பொங்கல் பண்டிகைகளை கொண்டாட போகிப் பண்டிகையை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். அதற்கு பதிலாக வேறு நாளை வேலை நாளாக அறிவிக்க வேண்டும்.