ஊர் கூடி காக்கும் அரசு துவக்கப்பள்ளி 60 ஆண்டுகளாக பாசத்துடன் பராமரிக்கும் மக்கள் - Asiriyar.Net

Thursday, January 31, 2019

ஊர் கூடி காக்கும் அரசு துவக்கப்பள்ளி 60 ஆண்டுகளாக பாசத்துடன் பராமரிக்கும் மக்கள்




அறுபது ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசுப்பள்ளியின் வளர்ச்சிக்கு, ஒட்டு மொத்த ஊரும், பெற்றோரும் துாண் போன்று நின்று பாதுகாத்து வருகின்றனர்.

அவிநாசி அருகே பழங்கரை ஊராட்சி, தேவம்பாளையத்தில், ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி உள்ளது. இப்பள்ளி, 1959ல் திறக்கப்பட்ட இப்பள்ளி, 60 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. கடந்த, 25 ஆணடுக்கும் மேலாக, இப்பள்ளியின் மீதான அக்கறையில், ஒட்டு மொத்த ஊரும், 
பெற்றோரும் அக்கறை காட்டுது சிறப்பு. அதன் விளைவு, மாணவர் எண்ணிக்கை குறையாமல் உள்ளது. தற்போது, 90 பேர் படிக்கின்றனர்.

பெற்றோர் ஆசிரியர்கள் கழகம் மற்றும் திருப்பூர் மத்திய லயன்ஸ் கிளப் சார்பில், பள்ளிக்கு தேவையான வசதிகள் கல்வித்துறையின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றிக் கொடுக்கப்படுகிறது. சில ஆண்டுக்கு முன், எஸ்.எஸ்.ஏ., பங்களிப்பு மற்றும் லயன்ஸ் கிளப் சார்பில், மாணவ, 
மாணவியருக்கென தனித்தனியாக கழிப்பிடம் அமைக்கப்பட்டு, உரிய முறையில் 
பராமரிக்கப்பட்டு வருகிறது.


ஆண்டுதோறும், சுதந்திர தின விழா, முத்தாய்ப்பாக அமைகிறது. விழாவில், குழந்தைகளுக்கு இலவச சீருடை வழங்குவர். பி.டி.ஏ., சார்பில், பணி ஓய்வு பெற்றவர்கள், பணி மாறுதலாகி சென்ற ஆசிரியர்கள் நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்படுவர். ஊர் மக்களின் ஒத்துழைப்பு, 
பலமான பி.டி.ஏ., மற்றும் தானாக முன்வந்து உதவும் தன்னார்வ அமைப்புகள் என, பள்ளியை தாங்கிப்பிடிக்க நாலாபுறமும் நல் உள்ளங்கள் இருப்பது, பள்ளியை நிர்வகிக்கும் தலைமையாசியர்களுக்கு பேருதவி புரிகிறது.


பள்ளி வளர்ச்சி குறித்து, பி.டி.ஏ., தலைவர் வெங்கடாஜலபதி கூறியதாவது:பழமை வாய்ந்த தேவம்பாளையம் துவக்க பள்ளியை, அவ்வப்போது மராமத்துப்பணி செய்து, புதுப்பொலிவுடன் வைத்திருக்கிறோம். பள்ளிக்கு அருகே, பயனற்று கிடக்கும் பழைய கழிப்பறையை இடிக்க, கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். பள்ளியை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்க, பள்ளி 
நிர்வாகம் சார்பில் கல்வித்துறைக்கு மனு அனுப்பியுள்ளோம். பி.டி.ஏ., சார்பில் வகுப்பறை தரையில் பளிங்கு கற்கள் பதிக்க முயற்சி செய்து வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Post Top Ad