ஜாக்டோ - ஜியோ போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திருவண்ணாமலையில் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், ஜன.22 முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தால் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் பணிகள் முடங்கிவிட்டன.
தினந்தோறும் ஆர்ப்பாட்டம், மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டுவருகின்றனர். போராட்டத்தை ஒடுக்க தமிழக அரசு பல்வேறு வழிகளில் செய்த முயற்சிகள் தோல்வியில் முடிந்துள்ளது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு மிரட்டியது. அடுத்ததாக போராடும் ஆசிரியர்களுக்கு நோட்டீஸ், தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் என்று அரசு அதிரடி காட்டியது.
ஆனாலும் போராட்டம் தீவிரமடைந்ததால், மறியல் செய்து கைதானவர்களில் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை மட்டும் சிறையில் போலீசார் அடைத்து வருகின்றனர். இந்நிலையில் ஜாக்டோ - ஜியோ போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது தமிழக அரசுக்கு மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினரை தமிழக அரசு அழைத்து பேச வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். அவர்களை கோரிக்கைகளை ஏற்று அவர்களை உடனடியாக பணிக்கு திரும்ப வைக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
உளுந்தூர்பேட்டையில் ஆர்பாட்டம்
உளுந்தூர்பேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள், வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளிக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க கூடாது என்று மாணவிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பள்ளி மாணவர்கள் ஆர்பாட்டம்
ஜக்டோ - ஜியோவுக்கு ஆதரவு தெரிவித்து பல இடங்களில் பள்ளி மாணவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை செங்குன்றம், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.