“மாலைக்குள் பணிக்கு திரும்பினால் நடவடிக்கை இல்லை” - பள்ளிக் கல்வித்துறை - Asiriyar.Net

Tuesday, January 29, 2019

“மாலைக்குள் பணிக்கு திரும்பினால் நடவடிக்கை இல்லை” - பள்ளிக் கல்வித்துறை


இன்று மாலை 7 மணிக்குள் ஆசிரியர்கள் பணிக்கு திரும்பினால் நடவடிக்கை இல்லை என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 8 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை, பணிக்கு திரும்பும்படி அரசு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

அரசின் கோரிக்கையை ஏற்று பணிக்குத் திரும்பும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்திருந்தது. அதற்கான கெடு இன்று காலை 9 மணியுடன் நிறைவடைந்தது.

இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேல்நிலை, உயர்நிலை பள்ளி ஆசிரியர்களை பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பதிலாக அந்த இடங்களில் தற்காலிக ஆசிரியர்களை பணியமர்த்த உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் மீது 17 பி நோட்டீஸ் அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இன்று மாலைக்குள் பணிக்கு திரும்பினால் நடவடிக்கை இல்லை எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

Post Top Ad