முதல்வர் பேச வேண்டும் : ஜாக்டோ - ஜியோ கோரிக்கை - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Wednesday, March 1, 2023

முதல்வர் பேச வேண்டும் : ஜாக்டோ - ஜியோ கோரிக்கை

 

'ஜாக்டோ - ஜியோ' அமைப்பினர், வரும் 5ம் தேதி உண்ணாவிரதம் அறிவித்துள்ள நிலையில், முதல்வர் தங்களை அழைத்து பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் கையெழுத்திட்டு, முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:


எங்கள் அமைப்பு, 2017ல் துவக்கப்பட்டது. நியாயமான கோரிக்கைகளுக்காக, முந்தைய ஆட்சியாளர்களின் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டு, தொடர்ச்சியாக போராட்ட இயக்க நடவடிக்கைகளை எடுத்தது.


கடந்த 2021ல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆதரவோடு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. தி.மு.க., தலைமையிலான ஆட்சி அமைந்து, ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கோரிக்கைகள் நிறைவேறும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தோம்.


ஆனால், அடிப்படை உரிமையான, அகவிலைப்படி என்பதே மறுக்கப்படக் கூடிய நிலைக்கு, தற்போது தள்ளப்பட்டு உள்ளோம். ஈட்டிய விடுப்பை சரண் செய்து, பணப்பயன் பெறக்கூடிய உரிமை, காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ளது.


கடந்த 2003 ஏப்., 1க்கு பின், பணியில் சேர்ந்தவர்களுக்கு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது, எட்டாக்கனியாக உள்ளது.


இதன் தொடர்ச்சியாக, ஜாக்டோ - ஜியோ வாழ்வாதார கோரிக்கைகளை வென்றெடுக்க, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.


கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 5ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம்; வரும் 24ம் தேதி 20 ஆயிரம் கி.மீ., மனித சங்கிலி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.


முதல்வர், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, எங்களுடன் இணைந்து செயலாற்றியதை நினைவு கூர்கிறோம். எனவே, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





Post Top Ad