கோவில்பட்டி அருகே ஆசிரியரை மாணவரின் உறவினர்கள் ஓட ஓட விரட்டி தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே உள்ள கீழநம்பிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியசாமி. இவருடைய மகள் செல்வி. செல்விக்கு திருமணம் ஆகி அவரது கணவர் சிவலிங்கத்துடன் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் வசித்து வருகிறார். சிவலிங்கம் மற்றும் செல்வி தம்பதிக்கு பிரகதீஸ் (வயது 7) என்ற மகன் உள்ளான். பிரகதீஸ் தனது தாத்தாவான முனியசாமி உடன் கீழநம்பிபுரத்தில் வசித்து வருகிறார். அங்குள்ள அரசு உதவி பெறும் இந்து தொடக்கப் பள்ளியில் பிரகதீஸ் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
அந்தப் பள்ளியில் வீரப்பட்டியை சேர்ந்த குருவம்மாள் (60) தலைமை ஆசிரியராகவும், தூத்துக்குடி தருவைகுளத்தைச் சேர்ந்த பாரத் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று வகுப்பில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்தபோது பிரகதீஸ் கீழே விழுந்ததாக தெரிகிறது. மெதுவாக விளையாடும்படி ஆசிரியர் பாரத் சத்தம் போட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மாணவர் பிரகதீஸ் வீட்டுக்குச் சென்று தனது தாத்தா முனியசாமியிடம் ஆசிரியர் பாரத் தன்னை அடித்ததாக கூறியுள்ளார். இதையடுத்து முனியசாமி அவசர போலீஸ் எண் 100 அழைத்து புகார் செய்துள்ளார். இதை எடுத்து போலீசார் இன்று பள்ளியில் சென்று விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. அப்படி ஒரு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என்று பள்ளி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று மதியம் பள்ளிக்குச் சென்ற சிவலிங்கம் அவரது மனைவி செல்வி, செல்வியின் தந்தை முனியசாமி ஆகியோர் எப்படி பையனை அடிக்கலாம் என்று ஆசிரியர் பாரத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றி ஆசிரியர் பாரத்தை அவ்வறாக பேசியது மட்டுமின்றி, கொலை மிரட்டல் விடுக்கும் நோக்கில் பேசியுள்ளனர்.
மேலும் காலணி எடுத்து ஆசிரியர் பாரத்தை ஓட ஓட விரட்டி தாக்கியுள்ளனர். இதை தடுக்க வந்த பள்ளி தலைமை ஆசிரியர் குருவம்மாளையும் தாக்கி உள்ளனர். இது குறித்து சம்பவம் கேள்விப்பட்டதும் எட்டையாபுரம் போலீசார் விரைந்து சென்று தாக்குதலில் ஈடுபட்ட சிவலிங்கம் , செல்வி மற்றும் முனியசாமி ஆகிய மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவரின் பெற்றோர் ஆசிரியர் மீது தாக்கல் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment