பொதுத் தேர்வு எழுத வராத மாணவர்கள் - அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் - Asiriyar.Net

Thursday, March 16, 2023

பொதுத் தேர்வு எழுத வராத மாணவர்கள் - அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

 
நிகழாண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுத வராத மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது ஏன் என்பது குறித்து மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கமளித்துள்ளார்.


தஞ்சாவூரில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கடந்த 2021-22-ம் கல்வியாண்டில் இடைநிற்றலான மாணவர்களில் 1.90 லட்சம் பேரை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்தோம். ஆனால், அவர்கள் ஓரிரு நாட்கள் மட்டும் பள்ளிக்கு வந்தனர். அதன்பின் அவர்கள் வரவில்லை. இருந்தாலும், அவர்களை பள்ளியில் இருந்து நீக்குமாறு நாங்கள்அறிவுறுத்தவில்லை. அவர்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில் கல்வியுடன் தொடர்பு இருக்க வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கும் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு வழங்குமாறு அறிவுறுத்தினோம். அவர்களைப் படிக்க வைக்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம்.


இடைநிற்றலான 1.90 லட்சம் மாணவர்களை மீண்டும் பள்ளியில்சேர்த்ததால் தான் நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வுஎழுதும் மாணவர்களின் எண்ணிக்கை 8.81 லட்சமாக உள்ளது. இவர்களை பள்ளியில் சேர்க்காமல் இருந்திருந்தால், 6.60 லட்சம் முதல் 6.70 லட்சம் பேர்தான் எழுதுவார்கள்.


இணையவழியில் கூட்டம்: ஆண்டுதோறும் பொதுத் தேர்வுக்கு வராத மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 4.5 சதவீதமாக இருப்பது வழக்கம். இது, நிகழாண்டு 5 சதவீதமாக உள்ளது. எனவே, இவ்விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனக் கல்வித் துறை அலுவலர்களிடம் அறிவுறுத்தியுள்ளோம். மேலும்,இதுதொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் மார்ச் 16-ம் தேதி (இன்று) இணையவழியில் கூட்டம் நடத்தவுள்ளேன். அடுத்து 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கப்படவுள்ளதால், அதற்கான ஆயத்தப் பணியையும் தொடங்கிவிட்டோம்.


நிகழாண்டு பொதுத் தேர்வுக்கு வராதவர்களுக்கும், தேர்வில்பங்கேற்று தேர்ச்சி பெறாதவர்களுக்கும் தனியாக சிறப்பு வகுப்புகள் நடத்தி, அவர்களுக்கு வரும் ஜூன் மாதம் உடனடித் தேர்வு நடத்தப்படும். தேர்வுக்கு வராதவர்களின் எண்ணிக்கை குறைய வேண்டும் என்பதற்காக முதல்வரும் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த நிலைமை படிப்படியாகக் குறையும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Post Top Ad