அனைத்து துறை பள்ளிகளும், பள்ளி கல்வி துறைக்கு கீழ் கொண்டு வரப்படுவது ஏன்? - அமைச்சர் விளக்கம் - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Tuesday, March 28, 2023

அனைத்து துறை பள்ளிகளும், பள்ளி கல்வி துறைக்கு கீழ் கொண்டு வரப்படுவது ஏன்? - அமைச்சர் விளக்கம்

 தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2023-24ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை பட்ஜெட் குறித்த விவாதத்தில் கே.வி.குப்பம் பூவை ஜெகன்மூர்த்தி (புரட்சி பாரதம்) பேசியதாவது: 


ஆதிதிராவிடர் நலத்துறைக்கு வழங்கப்படும் நிதி, கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் 95 சதவீதம் செலவிடப்பட்டது. ஆனால், 2021-22ம் ஆண்டு 83.19 சதவீதமும், 2022-23ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில் 37 சதவீதம் மட்டும்தான் செலவு செய்யப்பட்டுள்ளது. மீதி தொகை இந்த நிதியாண்டில் சேர்க்கப்பட வேண்டும்.


அமைச்சர் கயல்விழி செல்வராஜ்: 


ஆதி திராவிடர், பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்ட அனைத்து துறை பள்ளிகளும், பள்ளி கல்வி துறைக்கு கீழ் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஜாதி ஒழிய வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட திட்டமாகும். இந்த நிதியாண்டில் ஆதிதிராவிடர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி 95 சதவீதம் செலவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஒன்றிய அரசு தாமதமாக நிதி வழங்கியதே காரணம். எந்த தொகையும் திருப்பி அனுப்பப்படவில்லை.


அமைச்சர் சி.வி.கணேசன்: 


ஆதி திராவிடர்களுக்கு என தனியாக ஆணையம் அமைத்தது நம்முடைய முதல்வர் தான். இந்தியாவிலேயே முதல் முறையாக தாழ்த்தப்பட்டவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுத்ததும் கருணாநிதிதான். அந்த வகையில் ஆதிதிராவிடர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர்களுக்கு திமுக ஆட்சியில் செய்தது போன்று எந்த அரசும் செய்யவில்லை.


அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: 


இந்த ஆண்டு பட்ஜெட்டில் ஆதி திராவிடர் நலத்துறைக்கு ரூ.4,352 கோடியே 19 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட ரூ.70 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. தணிக்கை குழு அறிக்கை மற்றும் பல்வேறு கோரிக்கைகளின் அடிப்படையிலேயே ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் விஷயத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.


சபாநாயகர் அப்பாவு: 


பள்ளி கல்வி துறையின் கீழ் ஏனைய துறைகளின் பள்ளிகள் கொண்டுவரப்பட்டதற்கு பெரும்பாலானோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். இவ்வாறு விவாதம் நடந்தது.Post Top Ad