கொரோனா இரண்டாம் அலை... கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்த பத்து கட்டளைகள்! - Asiriyar.Net

Join Pallikalvi Telegram Group

Join PallikalviTn District Wise WhatsApp Groups

Thursday, April 15, 2021

கொரோனா இரண்டாம் அலை... கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்த பத்து கட்டளைகள்!

 








நாம் வழக்கம் போலத் தொடர்ந்து செயல்பட்டிருக்க முடியாது. அப்போதிலிருந்து இந்தக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தால்தான் நாம் இன்னும் 10லிருந்து 14 நாள்களுக்குள் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் கூறியிருக்கிறார்.



உலகம் முழுக்க கடந்த ஓராண்டுக்கு மேலாக உச்சரிக்கப்படும் வார்த்தை கொரோனா. கற்பனையில் கூட நினைத்திராத பல மாற்றங்களை எல்லாம் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது ஒரு சின்ன வைரஸ். உயிரிழப்புகள், பொருளாதார சிக்கல்கள், பயண தடை என ஒட்டுமொத்த உலகின் வாழ்வியலை புரட்டிப்போட்டிருகிறது பெருந்தொற்று. இந்தியாவில் கடந்த ஆண்டு மெல்லத் தொடங்கி செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் உச்சம் தொட்டது கொரோனா. ஊரடங்குக் கட்டுப்பாடுகளிலும் தளர்வு அளிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாகக் குறைந்து கடந்த ஆறு மாதங்களாகக் கட்டுக்குள் இருந்தது நோய்த் தொற்று. மக்கள் சிறிது சிறிதாக இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்க, மீண்டும் இரண்டாம் அலை என இப்போது விஸ்வரூபமெடுத்திருக்கிறது.




கடந்த முறையைவிட வேகமாக, மிக அதிக எண்ணிக்கையில் இருக்கிறது நோய் பரவல். ஒரே நாளில் ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது சமீபத்திய தரவுகள் சொல்லும் செய்தி. இந்த நோய்த் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ள, அரசு மீண்டும் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்திருக்கிறது. மக்களும் முன்னெச்சரிக்கையோடு அதிக கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.



இந்நிலையில் பொது சுகாதார நிபுணர் டாக்டர்.பிரப்தீப் கவுர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், சென்னையில் கொரோனாவின் இரண்டாம் அலை நோய் தாக்கம் பற்றியும், அதிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் பகிர்ந்திருக்கிறார்.



"சென்னையில் கடந்த வருடம் ஜூலை மாதம் முதல் வாரத்தில் தான் 2000 பேருக்கு மேல் ஒரே நாளில் பாதிக்கப்பட்டது பதிவானது. தற்போது அந்த எண்ணிக்கையைச் சென்னை தாண்டிவிட்டது. 2100 பேருக்கு மேல் ஒரே நாளில் 'நம்ம சென்னையில்' பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் ஆக்சிஜென் வசதியுடன் கூடிய மருத்துவமனை படுக்கைகள் பற்றாக்குறை ஏற்படும். நாம் உயிரிழப்புகளைச் சந்திப்போம் என எச்சரித்திருக்கிறார். மேலும், நாம் வழக்கம் போலத் தொடர்ந்து செயல்பட்டிருக்க முடியாது. அப்போதிலிருந்து இந்தக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்தால்தான் நாம் இன்னும் 10லிருந்து 14 நாள்களுக்குள் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் கூறியிருக்கிறார்.




மேலும் கொரோனா கட்டுப்பாட்டில் நாம் செய்ய வேண்டிய விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். அந்த பதிவிலிருந்த பத்து கட்டளைகள் இதோ...

1. எல்லாவிதமான கூட்டங்களையும் தவிருங்கள். வேலைக்கும், அத்தியாவசிய பொருள்கள் வாங்கவும் மட்டும் வெளியே செல்லுங்கள்.


2. மாஸ்க் (முகக்கவசம்) அணிந்து மட்டுமே வெளியே செல்லுங்கள்.



3. வீடு, அலுவலகம், குடியிருப்பு பகுதிகளில் கூட்டமாக நடைபெறும் நிகழ்வுகளைத் தவிருங்கள்.


4. வெளிச்சம், காற்றோட்டம் இல்லாத மூடி அறைகளில் நடத்தப்படும் கூட்டங்களைத் தவிருங்கள்.


5. அடுத்த 2 -3 மாதங்களுக்கு எந்த விதமான குடும்ப நிகழ்வுகள், கூட்டங்கள் ஆகியவற்றைத் திட்டமிடாதீர்கள்.


6. முடிந்தவரை வீட்டிலிருந்து பணியாற்றுங்கள். (Work from home)


7. உள் அமர்ந்து உணவு உண்ணும் இடங்களைத் தவிருங்கள். (Avoid Indoor dining)



8. பணியிடங்களில், மார்க்கெட்டுகளில் கட்டாயம் சமூக விலகலை கடைப்பிடியுங்கள்.


9. 45 வயதிற்கு மேலானவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள்.


10. காய்ச்சல், சளி, இருமல், அதிகப்படியான சோர்வு, வாசனை இழப்பு, சுவை இழப்பு, மூச்சுவிடுவதில் சிரமம் போன்ற எந்த அறிகுறிகள் தென்பட்டாலும் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.




Post Top Ad