தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) 4 டிகிரி வரை வெயில் அதிகரிக்க வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த வாரத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக சில இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்தது. கடும் வெயில் வாட்டி வதைத்து வந்ததற்கு இடையில், இந்த கோடை மழையால் ஓரளவு வெயிலின் தாக்கம் குறைந்தது.
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. அந்தவகையில், காற்றில் ஒப்பு ஈரப்பதம் இருப்பதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி மற்றும் கரூர் ஆகிய 22 மாவட்டங்களில் இயல்பான வெப்பநிலையில் இருந்து 2 முதல் 4 டிகிரி வரை இன்று (புதன்கிழமை) அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஓரிரு இடங்களில் கனமழை
இதேபோல், மராட்டிய மாநிலம் விதர்பா முதல் உள் தமிழகம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, மதுரை, திருச்சி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் இன்று பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ‘பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை, புத்தன் அணை தலா 7 செ.மீ., ஈரோடு, நாமக்கல் தலா 5 செ.மீ, எடப்பாடி, பல்லடம், கெட்டி, கோத்தகிரி தலா 4 செ.மீ., கயத்தாறு 3 செ.மீ., ஒகேனக்கல் 2 செ.மீ.' மழை பெய்துள்ளது.
No comments:
Post a Comment