ஆசிரியர்களின் கூட்டுறவு சங்க கடன் விவரங்களை மறைத்த தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனரகம் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசுப் பள்ளிகள் மற்றும் கல்வித்துறை அலுவலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பெற்ற கடனை சரிவர திரும்பச் செலுத்தவில்லை என தெரியவந்துள்ளது.
பள்ளி தலைமை ஆசிரியரின் ஒப்புதல்படியே பிற பணியாளர்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. ஆனால், கடன் தொகையை ஊதியத்தில் பிடித்தம் செய்ய தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆசிரியர்கள் கடனை திரும்பச் செலுத்தவில்லை எனில், கூட்டுறவு சங்கங்களுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படும் சூழல் உள்ளது என்று பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் புகார் தெரிவித்துள்ளன. அதோடு ஆசிரியர்கள் கடன்பெற்ற விவரங்களை ஊதியச்சான்றிதழில் மறைத்து, இதர வங்கிகளில் வீட்டுக்கடன் வாங்குவதற்கு தலைமை ஆசிரியர்கள் உதவி செய்வதாக தெரிய வருகிறது. இது தவறானது. அரசுப் பணியாளர் நடத்தை விதிகளுக்கும் எதிரானது.
எனவே, அவ் வாறு தவறு செய்தவர்கள் மீது ஒழுங்கு விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், அவர்கள் பெற்ற கடன் தொகையை உரிய முறையில் திரும்பச் செலுத்தவும் முதன்மைக்கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல, ஆசிரியர்கள் கடன் பெற்ற விவரத்தை மறைத்து, முழு ஊதியம் பெற வழி செய்த தலைமை ஆசிரியர்கள் மீதும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரங்களை பள்ளிக்கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். இனி கடன்பெற்ற ஆசிரியர்களின் ஊதியத்தில் உரிய தொகையை பிடித்தம் செய்து அதை வங்கிக் கணக்கில் செலுத்த தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment