இடைநிலை ஆசிரியர்களை நிச்சயம் கைவிட மாட்டோம்: அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி - Asiriyar.Net

Sunday, January 4, 2026

இடைநிலை ஆசிரியர்களை நிச்சயம் கைவிட மாட்டோம்: அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி

 



இடைநிலை ஆசிரியர்களை நிச்சயம் கைவிட மாட்டோம் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் கடந்த மாதம் (டிசம்பர்) 26ம் தேதியில் இருந்து தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். 


நேற்று 9வது நாளாகவும் தங்களுடைய போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்நிலையில், சென்னையில் நேற்று நடந்த புத்தக வாசிப்பு விழிப்புணர்வு நடைபயண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உரையாற்றினார்.


பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவரிடம் போராட்டம் குறித்தும், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா என்பது குறித்தும் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் கூறுகையில், ‘‘தேர்தல் வாக்குறுதியில் சொன்னதைத்தான் கேட்கிறார்கள். அதை நிறைவேற்றுவதில் உள்ள சில கேள்விகளை நிதித்துறை எங்களிடம் கேட்டு இருக்கிறது. அதற்கான விளக்கத்தை வழங்க உள்ளோம். 


அது சார்ந்து அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ, அதனை செய்வோம். இது என்னுடைய துறை. என்னுடைய ஆசிரியர்கள் சார்ந்த கோரிக்கை. போராட்டம் என்பது வெறும் பத்திரிகை செய்திகள் மட்டும் அல்ல. உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடிய வலி. அந்த வலி எனக்கும் இருக்கிறது. அதற்கு நல்ல விடிவை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. போராட்டம் நடத்துபவர்களிடம் பேசி கொண்டுதான் இருக்கிறோம். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவோம். என்னுடைய குடும்ப உறுப்பினர்களான ஆசிரியர்களை கண்டிப்பாக கைவிடமாட்டேன்’’ என்றார்.


No comments:

Post a Comment

Post Top Ad