அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.3 ஆயிரம் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது. அதன்பிறகு, சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்த திமுக, 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பணத்தை வழங்கியது. ஆனால், கடந்த ஆண்டு (2025) பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. ரொக்கப் பணம் எதுவும் வழங்கப்படவில்லை.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடக்க இருப்பதால், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கப் பணமும் வழங்கப்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தார்கள்.இந்த நிலையில், 2026 பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு ரூ.248 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு கொள்முதல் செய்வதற்காக இந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை தகவல் தெரிவித்தது.
இந்த அறிவிப்பை கேட்டு, பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு மட்டும்தானா?, ரொக்கப் பணம் கிடையாதா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது பொங்கல் பரிசு தொகுப்புடன் எவ்வளவு ரொக்க பணம் வழங்குவது என்பது குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். ஆலோசனையின் முடிவில் ரூ.3 ஆயிரம் ரொக்க பணம் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, அரிசி அட்டைதாரர்களுக்குக் ரூ.3 ஆயிரம் பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இயற்கையின் முதன்மை வடிவாய் அமைந்த சூரியனுக்கும் உழவர்களின் உழைப்பிற்கு உறுதுணையாய் விளங்கும் கால்நடைகளுக்கும் உலக மக்களுக்கு உணவளித்துப் பசி பிணி போக்கும் விவசாயிகளுக்கும் நன்றி கூறி குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து உலகத் தமிழர்களால் பன்னெடுங் காலமாகக் கொண்டாடப்படும் பாரம்பரிய உன்னத விழா பொங்கல் திருநாள் ஆகும்.
பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடிட தமிழ்நாடு அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளார்கள். இதன்மூலம் 2,22,91,710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் பயன்பெறுவர்.
மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள வேட்டி சேலைகள் அனைத்தும் எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் விழாவை மேலும் சிறப்பாக கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் ரொக்கப் பரிசாக ரூ.3000/- வழங்கிட . மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்கப் பரிசும், பொங்கல் பரிசுத் தொகுப்பும், வேட்டி சேலைகளும் அனைத்து நியாயவிலைக் கடைகள் வழியாக வழங்கிட அனைத்து ஏற்பாடுகளும் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:
Post a Comment