பள்ளிக்கல்வி கமிஷனர் அலுவலகத்தில், திங்கள் கிழமைகளில் குறைதீர் மனுக்கள் வாங்கும் பணி நேற்று துவங்கியது. ஏராள மானோர் கமிஷனரை சந்திக்க வந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
தி.மு.க., ஆட்சி அமைந்ததும், தமிழக பள்ளி கல்வித்துறை இயக்குனரக தலைமை பொறுப்பில், நந்தகுமார் என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டார். கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், திங்கள்கிழமை தோறும் ஒரு மணி நேரம், பொதுமக்களிடம் மனு வாங்கும் பணியை நேற்று துவக்கினார். மனு வாங்க முதல் நாள் என்பதால், பள்ளி கல்வியின் பல்வேறு மாவட்ட பிரச்னைகள் தொடர்பாக மனுக்கள் அளிக்கவும், நேரில் சந்தித்து பேசவும் ஏராளமானோர் வந்தனர். கமிஷனரை சந்திக்க அவர்கள் காத்திருந்ததால், இயக்குனரகத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
அதேபோல, பள்ளி நிர்வாகிகளும், ஆசிரியர் சங்கத்தினரும், கமிஷனர் நந்த குமாரை சந்தித்து, பள்ளி கல்வி பிரச்னைகளை பேச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வியாழன் மற்றும் வெள்ளி கிழமைகளில் மாலையில் ஒரு மணி நேரமும், பார்வையாளர்களை சந்தித்து கமிஷனர் குறை கேட்பார் என, பள்ளி கல்வி இயக்குனரக அலுவலர்கள் தெரிவித்தனர்.