தன் வகுப்பு மாணவர்களுக்கு இலவச செல்போனை வழங்கி அவர்களின் ஆன்லைன் கல்விக்கு அரசுப் பள்ளி ஆசிரியர் கார்த்திக்ராஜா உதவி செய்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு அரசு, தனியார் என அனைத்துப் பள்ளி மாணவர்களுமே ஆன்லைன் மூலம் படிக்க வேண்டிய அவசியத்துக்கு ஆளாகிவிட்டனர். இதில் இணைய வசதி இல்லாத விளிம்புநிலை மாணவர்கள், தொலைதூர கிராமங்களில் வசிப்பவர்களின் நிலை தொடக்கம் முதலே கேள்விக்குறியாக இருந்துவந்தது. அவர்களுக்காக, பல்வேறு அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கூட்டு முயற்சியால் ஆன்லைன் கல்வி ரேடியோவைத் தொடங்கியவர் கடலூர் மாவட்டம், கத்தாழை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஆ.கார்த்திக்ராஜா.
சாதாரண போனில் மிகக் குறைந்த இணைய அலைவரிசை கிடைத்தால்கூட இயங்கும் வகையில், எளிய முறையில் ஆன்லைன் கல்வி ரேடியோ பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த ரேடியோவில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களும் தினந்தோறும் சுழற்சி முறையில் ஒலிபரப்பாகின்றன.
ஆன்லைன் கல்வி ரேடியோவின் செயல்பாடுகள் குறித்து விரிவாக வாசிக்க: ஸ்மார்ட்போன், அதிவேக இணையம் தேவைப்படாத ஆன்லைன் கல்வி ரேடியோ: அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்
இந்நிலையில் கரோனா ஊரடங்கு காலத்தில் தன் வகுப்பு மாணவர்கள் தொய்வின்றிப் படிப்பதற்காக ஆசிரியர் கார்த்திக்ராஜா ஒவ்வொரு மாணவருக்கும் செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறும்போது, ''முதல்கட்ட முயற்சியாக சாதாரண பட்டன் போன்கூட இல்லாத, என்னுடைய 4-ம் வகுப்பு மாணவர்களுக்கு செல்போன் வாங்கிக் கொடுக்க முடிவெடுத்தேன். எனினும் சென்னையைச் சேர்ந்த சகோதரர்கள் ஜெகதீஷ் மற்றும் உமா ஜெகதீஷ் ஆகிய இருவரின் உதவியுடன் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் செல்போன் வாங்கிக் கொடுத்துவிட்டோம்.
ஒரு செல்போனின் விலை ரூ.1,700 என்ற வகையில் 18 பேருக்கு ரூ.30,600 மதிப்பில் செல்போன்கள் இன்று (ஜூலை 9) வழங்கப்பட்டன. இதில் சிம் வசதியும் ஓராண்டுக்கான இணைய வசதியும் உள்ளது என்பதால், பெற்றோர்கள் மாதாமாதம் ரீசார்ஜ் செய்யத் தேவையில்லை.
இந்த செல்போன் எளிமையான 2ஜி பட்டன் போன் என்பதால், மாணவர்களின் கவனம் சிதறப் பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை. உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதுகாப்பான ஆன்லைன் கல்வியாக இது இருக்கும். உதவும் உள்ளங்களும் நிதி உதவியும் கிடைத்தால் விரைவில் பள்ளியின் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் செல்போன் வழங்க ஏற்பாடு செய்வோம்'' என்று ஆசிரியர் கார்த்திக்ராஜா தெரிவித்தார்.
தொடர்புக்கு: ஆசிரியர் கார்த்திக்ராஜா - 7904163487